மிரட்டிய ஊராட்சி தலைவி… உயிரை மாய்த்த பெண்… கொந்தளித்த கிராம மக்கள்… சுடுகாடு ஆக்கிரமிப்பால் நடந்த களேபரம்

 

மிரட்டிய ஊராட்சி தலைவி… உயிரை மாய்த்த பெண்… கொந்தளித்த கிராம மக்கள்… சுடுகாடு ஆக்கிரமிப்பால் நடந்த களேபரம்

சுடுகாட்டு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த பஞ்சாயத்து தலைவியை தட்டிக் கேட்ட பெண்ணை மிரட்டப்பட்டுள்ளார். இதனால் வேதனை அடைந்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த வேதனையான சம்பவம் திருவள்ளூர் மாவட்டத்தில் நடந்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் அருகே உள்ளது கன்னிகாபுரம் ஊராட்சி. இந்த ஊராட்சி மன்றத் தலைவராக லட்சுமி என்பவர் இருந்து வருகிறார். இவர் திமுக பிரமுகர் முரளியின் மனைவியாவார். அந்த ஊரில் அண்ணாநகரில் சுடுகாடு அமைந்துள்ளது. இந்த சுடுகாட்டு நிலத்தை ஊராட்சி மன்ற தலைவரின் கணவன் முரளி ஆட்டையை போட்டுள்ளார். இது குறித்து, அவரிடம் பொதுமக்கள் கேட்டுள்ளனர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் முரளியின் சகோதரர் வேலு, அவரது ஆதரவாளர்கள் சேர்ந்து கொண்டு அந்த ஊரை சேர்ந்த உதயாவையும், செந்தில்குமாரையும் கடுமையாக தாக்கியதோடு, கொலை செய்துவிடுவதாக கூறியுள்ளனர். இது குறித்து கிராம மக்கள், வெங்கல் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். ஒரு பக்கம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில், மறுபக்கம் சுடுகாட்டு ஆக்கிரமிப்பை அகற்றக் கோரியும், முரளியின் நடவடிக்கைகளைக் கண்டித்தும் கடந்த 14-ஆம் தேதி கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, வேலுவை காவல்துறையினர் கைது செய்தனர். இதனால் கொந்தளித்த முரளியும், அவரது மனைவி லட்சுமியும், அவரது மாமியாரும் மறியல் செய்த செந்தில் குமாரையும், அவரது மனைவியையும் மிரட்டியுள்ளனர்.

இதனால் வேதனை அடைந்த பிரியா, கழுத்தில் கயிற்றை மாட்டி தற்கொலை செய்ய முயன்றார். உடனடியாக அவர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று பிரியா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் கொந்தளித்த கிராம மக்கள், பஞ்சாயத்து தலைவி லட்சுமி, அவரது கணவர் முரளி மற்றும் அவரது ஆதரவாளர்களை கைது செய்யும் வரை பிரியாவின் உடலை வாங்க மாட்டோம் என்று கூறிவிட்டனர். அவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், பொதுமக்களோ, குற்றவாளிகளை கைது செய்தால்தால் உடலை வாங்குவோம் என்று தெரிவித்துவிட்டனர்.

மனமுடைந்த பிரியா, வீட்டிற்கு சென்ற சிறிது நேரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொள்ள முயன்றார். சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி, ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். குற்றவாளிகளைக் கைது செய்யும் வரை பிரியா உடல் அடக்கம் நடைபெறாது என கிராம மக்கள் உறுதியாகத் தெரிவித்தனர். இதையடுத்து, சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யப்படும் என்று காவல்துறையினர் உறுதியளித்தனர். இதையடுத்து, பிரியாவின் உடலை பொதுமக்கள் அடக்கம் செய்தனர்.

இதையடுத்து, தலைமறைவாக இருக்கும் ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி, அவரது கணவர் முரளி உள்ளிட்ட 6 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ஊராட்சி மன்ற தலைவரே ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.