ஓசூரில் இளம் தொழிலதிபர் வெட்டிக்கொலை… கடனுக்கு வட்டி செலுத்தாததால் வெறிச்செயல்!

 

ஓசூரில் இளம் தொழிலதிபர் வெட்டிக்கொலை… கடனுக்கு வட்டி செலுத்தாததால் வெறிச்செயல்!

கிருஷ்ணகிரி

ஓசூரில் கடனுக்கு வட்டி செலுத்தாததால் இளம் தொழிலதிபர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை சேர்ந்தவர் பாலாஜி (31). இவர் ஓசூர் ராஜேஸ்வரி லேஅவுட் பகுதியில் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இவருக்கு பிருந்தா என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். பாலாஜி தொழில் தொடர்பாக, ஓசூர் கெலமங்கலத்தை சேர்ந்த ரகுராமன் (26) என்பவரிடம் ரூ.31 லட்சம் வட்டிக்கு பணம் வாங்கி உள்ளார்.

ஊரடங்கு காரணமாக கடந்த சில மாதங்களாக தொழில் சரிவர நடைபெறாததால், பாலாஜியால் கடந்த சில மாதங்களாக வட்டி கொடுக்கவில்லை. இதனால் வட்டிப்பணம் கேட்டு ரகுராமன் தகராறு செய்துள்ளார். இதனை அடுத்து, பாலாஜியின் பெற்றோர் ஓசூருக்கு சென்று மாதம் ரு.5 லட்சம் வீதம் வட்டியுடன் பணம் கொடுத்து விடுவதாக ரகுராமனிடம் கூறி உள்ளனர்.

ஓசூரில் இளம் தொழிலதிபர் வெட்டிக்கொலை… கடனுக்கு வட்டி செலுத்தாததால் வெறிச்செயல்!

இந்த நிலையில், கடந்த 10ஆம் தேதி ரகுராமனின் வீட்டிற்கு சென்ற பாலாஜி, அவரிடம் காசோலையை கொடுத்து, வங்கியில் பணம் எடுத்துக்கொள்ள கூறி உள்ளார். ஏற்கனவே பணம் இல்லாததால் காசோலை திரும்பிய நிலையில், மீண்டும் பாலாஜி காசோலை கொடுத்ததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில், ஆத்திரமடைந்த ரகுராமன் வீட்டில் இருந்த அரிவாளால் பாலாஜியை சரமாரியாக வெட்டினார்.

இதில், பாலாஜியின் இடது கை துண்டாகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த ஓசூர் டிஎஸ்பி முரளி தலைமையில் அட்கோ போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய ரகுராமன், மோகன் அகியோரை தேடி வருகின்றனர்.