சூடானில் ஆட்சி கவிழ்ப்பு; அதிபரை சிறை பிடித்தது ராணுவம்!

 

சூடானில் ஆட்சி கவிழ்ப்பு; அதிபரை சிறை பிடித்தது ராணுவம்!

சூடானில் கடந்த 1989-ஆம் ஆண்டு நடைபெற்ற ராணுவத்தின் ஆட்சி கவிழ்ப்பின் போது, அதிகாரத்தை பிடித்து அதிபரானவர் முன்னாள் ராணுவ அதிகாரியான ஒமர் அல் பஷீர்

கார்டூம் (சூடான்): ராணுவ புரட்சி காரணமாக சூடான் நாட்டில் ஆட்சி கவிழ்ப்பு ஏற்பட்டு அந்நாட்டு அதிபரை ராணுவம் சிறை பிடித்துள்ளது.

சூடானில் கடந்த 1989-ஆம் ஆண்டு நடைபெற்ற ராணுவத்தின் ஆட்சி கவிழ்ப்பின் போது, அதிகாரத்தை பிடித்து அதிபரானவர் முன்னாள் ராணுவ அதிகாரியான ஒமர் அல் பஷீர். கடுமையான ஆட்சி புரிந்து வந்த இவரது அரசுக்கு எதிராக, பொருளாதார சீர்கேடு, ஊழல், வாழ்வாதார செலவு உயர்வு, மோசமான மேலாண்மை உள்ளிட்டவைகளை கண்டித்து அந்நாட்டு மக்கள் கடந்த சில மாதங்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

sudan

போராட்டங்களுக்கு இடையூறு செய்யவேண்டாம் என காவல்துறை அதிகாரிகளுக்கு ஆணையிட்டது. ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான ஒடுக்குமுறை மேற்கொள்ளப்பட்டதாக போராட்டக்குழுக்கள் அரசை விமர்சித்தன. பொதுமக்களின் போராட்டத்தால் அங்கு அசாதாரணமான சூழல் நிலவியது. மேலும், இந்த போராட்டங்களில் சிக்கி சுமார் 38 பேர் உயிரிழந்திருப்பதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறுகிறது. ஆனால், இந்த எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது.

sudan

இதனால், ஒமர் அல் பஷீர் தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் நாட்டில் அவசர நிலையை பிரகடனப்படுத்தினார். நிலைமை மோசமடைந்ததையடுத்து, அந்நாட்டில் ராணுவப் புரட்சி ஏற்பட்டது. இதன் காரணமாக, அந்நாட்டில் ஆட்சி கவிழ்ப்பு ஏற்பட்டு, அதிபர் ஒமர் அல் பஷீரை ராணுவத்தினர் சிறை பிடித்துள்ளனர். இதையடுத்து, சுமார் 30 ஆண்டுகாலமாக நடைபெய்று வந்த ஒமர் அல் பஷீரின் ஆட்சி தூக்கி எறியப்பட்டு, சூடானில் ராணுவ ஆட்சி அமலுக்கு வந்துள்ளது.

sudan

இதுகுறித்து அந்நாட்டு பாதுகாப்பு துறை அமைச்சர் கூறுகையில், கைது செய்யப்பட்டுள்ள ஒமர் அல் பஷீர் பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட்டுள்ளார். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு ராணுவ ஆட்சி அமலில் இருக்கும். அதற்கு பிறகு, சுதந்திரமான, நியாயமான தேர்தல் நடத்தப்படும். மூன்று மாதங்களுக்கு ராணுவம் ஆவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளது. நாட்டின் எல்லைகள், வான் எல்லைகளை ராணுவம் மூடியுள்ளது. ஒருமாதத்துக்கு இரவு நேரத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றார்.

குற்றங்களை ஒருங்கிணைத்ததாகவும், மனிநேயமற்ற குற்றங்கள் நிகழ்த்தியதாகவும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், ஒமர் அல் பஷீருக்கு ஏற்கனவே பிடியாணை பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிங்க

மலேசியாவில் வெளிநாட்டவர்கள் 44 பேர் கைது!