இந்தோனேசியாவை சிதைத்த சுனாமி: பலி எண்ணிக்கை 373ஆக உயர்வு!

 

இந்தோனேசியாவை சிதைத்த சுனாமி: பலி எண்ணிக்கை 373ஆக உயர்வு!

இந்தோனேசியாவை புரட்டிப் போட்ட சுனாமியில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 373ஆக உயர்ந்துள்ளது.

ஜகர்த்தா: இந்தோனேசியாவை புரட்டிப் போட்ட சுனாமியில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 373ஆக உயர்ந்துள்ளது.
 
இந்தோனேசியாவில் கிரகட்டோவா என்ற நீருக்கு அடியில் இருந்த எரிமலை வெடித்ததால், கடலுக்கு அடியில் நிலநடுக்கம் ஏற்பட்டு அது சுனாமியாக மாறியது. சுமார் 65 அடி உயரம் வரை ராட்சத சுனாமி அலைகள் எழும்பி கரையை வந்தடைந்தன. இந்த சுனாமி அலைகள் தெற்கு சுமத்ரா மற்றும் மேற்கு ஜாவா தீவுகளை கடுமையாகத் தாக்கின.

இதனால், கடற்கரை ஓரமாக இருந்த நூற்றுக்கணக்கான வீடுகள், கட்டடங்கள் சீறிப்பாய்ந்த சுனாமி அலைகளுக்கு இறையாகியது.  ஊருக்குள் கடல்நீர் புகுந்ததால் பீதி அடைந்த மக்கள் அங்கிருந்து வெளியேறிப் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். எனினும், சுனாமி தாக்குதலில் சிக்கி 43 பேர் உயிரிழந்ததாக முதல் கட்ட தகவல் வெளியானது. தொடர்ந்து, இந்த பலி எண்ணிக்கை அதிகரித்து வண்ணம் இருந்தது. 

நேற்று மாலை நிலவரப்படி பலியானோரின் எண்ணிக்கை 222ஆக இருந்தது. அதன்பின் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தற்போதைய நிலவரப்படி, ஆழிப் பேரலையின் கோரத் தாண்டவத்தில் உயிரைப் பறி கொடுத்தவர்களின் எண்ணிக்கை 373ஆக உயர்ந்துள்ளது.

இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், 1400க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளதாகவும் தேசிய பேரிடர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இரண்டாவது முறையும் சுனாமி தாக்கக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளதால், உயிரைக் காப்பாற்றிக் கொள்ள பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து பலர் வெளியேறி வருகின்றனர்.