ட்விட்டர் சிஇஓ பராக் அகர்வால் நீக்கம் - எலான் மஸ்க் அதிரடி..

 
ஜகா வாங்கிய எலான் மஸ்க்.. 'ட்விட்டர் நிர்வாகக் குழுவில் சேர விருப்பமில்லை' - பாரக் அகர்வால் அறிவிப்பு..

ட்விட்டர் நிறுவனத்தை கைப்பற்றியவுடன், சிஇஓ பராக் அகர்வாலை அதிரடியாக நீக்கம் செய்திருக்கிறார் எலான் மஸ்க்..


உலகப் பெரும் பணக்காரரான  எலான் மஸ்க், ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனங்களுடன் ட்விட்டர் நிறுவனத்தையும் தனது பெயருடன் இணைத்திருக்கிறார். ட்விட்டர் நிறுவனத்தை முழுமையாக கைப்பற்றி, அதன் உரிமையாளர் ஆகியிருக்கிறார்.   கடந்த ஏப்ரல் மாதம் 44 பில்லியன் டாலருக்கு ட்விட்டரை வாங்கவிருப்பதாக எலான் மஸ்க் அறிவித்திருந்தர்.  பின்னர் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் முடிவை கைவிடப்போவதாக அறிவித்தார்.  அதன்பிறகு  ட்விட்டர் நிறுவனம் நீதிமன்றத்தை நாடியதால்,  மீண்டும் நானே  வாங்கிக் கொள்கிறேன் என்று கூறினார். இந்நிலையில் தான் நேற்று (வியாழக்கிழமை)  ட்விட்டர் நிறுவனத்தை முழுவதுமாக கைப்பற்றினார்.  முதன் முதலில்  ட்விட்டர் அலுவலகத்திற்குள் சென்ற அவர்,   கையில் ஒரு கைகழுவும் தொட்டியை தூக்கிக் கொண்டு சென்றார்.

 ட்விட்டர் சிஇஓ பராக் அகர்வால் நீக்கம் - எலான் மஸ்க் அதிரடி..

அந்த வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்த அவர், Let that sink in!('நான் ட்விட்டர் தலைமையகத்திற்குள் நுழைகிறேன். அது மூழ்கட்டும்')  என்று பதிவிட்டிருந்தார்.  இந்த கேப்ஷன்  பல உள் அர்த்தங்கள் இருந்ததாகவும்,  இது  பணக்காரத்தனத்தின் உச்சம் என்றும் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.  

இந்நிலையில், ட்விட்டர் நிறுவனத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்த உடனே, முதல் வேலையாக   ட்விட்டர் சிஇஓ பராக் அகர்வாலை பணி நீக்கம் செய்திருக்கிறார்.  அவர் மட்மின்றி  ட்விட்டரில் தலைமை நிதி அதிகாரி நெட் சேகல், சட்டத்துறை தலைவர் விஜயா கட்டே, பொது ஆலோசகர் சீன் எட்கல் என உயர் அதிகாரிகள் பலரையும் அடுத்தடுத்து அதிரடியாக  பணி நீக்கம் செய்திருக்கிறார். இந்த தகவலை  வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை வெளியிட்டுள்ளது.  ஆனால் எலான் மஸ்க் தரப்போ, ட்விட்டர் தரப்போ இதுவரை இந்த பணி நீக்கங்கள் எந்த தகவலையும் உறுதிபடுத்தவில்லை..

பராக் அகர்வால்

இதற்கிடையே ட்விட்டர் மஸ்க் கைவசம் வந்த பின்னர்,  இப்போது இருக்கும் ஊழியர்களில் 75% பேரை அவர் பணிநீக்கம் செய்ய வாய்ப்பிருப்பதாக ஏற்கனவே   கூறப்பட்டது. இதனால் ஊழியர்கள் பலரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இதுதொடர்பாக  வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகைக்கு, பேட்டியளித்துள்ள  பெயர் குறிப்பிட விரும்பாத ஊழியர்களில் சிலர்,  எலான் மஸ்க்  தலைமையின் கீழ்  வேலை பார்க்க விருப்பமில்லாததால் நாங்கள் பணியிலிருந்து விலகிவிட்டோம் என்று கூறியிருக்கின்றனர்.  வேறு சிலர், இப்போதைக்கு எந்த கடினமான முடிவையும் எடுப்பதாக இல்லை என்றும்,   இன்னும் சில காலம் இங்கேயே பணியைத் தொடர்வோம் என்றும்  தெரிவித்துள்ளனர்.