உக்ரைன் தலைநகர் கீவ் சென்றுள்ள ஐ.நா பொதுச்செயலாளர் - ரஷ்ய படைகள் ஏவுகணை தாக்குதல்

 
UN Chief


ஐ.நா பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் உக்ரைன் தலைநகர் கீவ் சென்றுள்ள நிலையில், அந்நகர் மீது ரஷ்ய படைகள் ஏவுகணை தாக்குதல் நடத்திய சம்பவம் ஐநாவை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 

நேட்டோ அமைப்பில் இணைய முயற்சித்தது மற்றும் மேற்கத்திய நாடுகளுடன் உறவு வைத்தது உள்ளிட்ட உக்ரைன் நடவடிக்கைகளால் ஆத்திரம் அடைந்த ரஷ்யா உக்ரைன் நாட்டின் மீது கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி போரை தொடங்கியது. இரண்டு மாதத்தை கடந்தும் போர் நடைபெற்று வரும் நிலையில், இதனால் பெரும் பொருட்சேதம் மற்றும் உயிர்சேதம் ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர். ரஷ்யாவின் கொடூர தாக்குதலுக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. உக்ரைனுக்கு உதவிக்கரம் நீட்டி வரும் உலக நாடுகள், ரஷ்யாவிற்கு எதிர்வினையாற்றும் வகையில் பொருளாதார தடைகளை விதித்துள்ளன. போரை நிறுத்துவது தொடர்பாக பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற போதிலும் அதில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனிடையே கடந்த 2 நாட்களுக்கு முன் ரஷ்யா சென்ற ஐ.நா பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் அதிபர் புதினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். 

Russia

இந்நிலையில், ஐ.நா பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் உக்ரைன் தலைநகர் கீவ் சென்றுள்ள நிலையில், அந்நகர் மீது ரஷ்ய படைகள் ஏவுகணை தாக்குதல் நடத்தின. தலைநகர் கீவில், அதிபர் செலன்ஸ்கி உடன் இணைந்து அவர் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் போரை நிறுத்த தவறி விட்டதற்காக வருத்தம் தெரிவித்தார். அடுத்த ஒரு மணி நேரத்திற்குள், அங்கிருந்து 3.5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கட்டிடங்கள் மீது ரஷ்ய படைகள் ராக்கெட் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நிகழ்த்தின. 2 வாரங்களாக கீவ் நகர் மீது எவ்வித தாக்குதலும் நிகழ்த்தப்படாத நிலையில், ஐ.நா பொதுச்செயலாளர் வந்துள்ள சமயத்தில் ரஷ்ய படைகள் தாக்குதல் நிகழ்த்தியது ஐ.நா அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஐ.நா-வை அவமதிக்கும் நோக்கில் ரஷ்யா இந்த தாக்குதலை நிகழ்த்தி உள்ளதாக அதிபர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.