ஜப்பானில் இருந்து பப்புவா நியூ கினியாவுக்கு புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி!

 
PM Modi

ஜி7 மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சென்றிருந்த பிரதமர் மோடி ஜப்பான் பயணத்தை முடித்துக்கொண்டு பப்புவா நியூ கினியா சென்றார். 

பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்ப ரீதியாக வளர்ந்த நாடுகளை கொண்ட ஜி7 கூட்டமைப்பின்  49வது உச்சி மாநாடு ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா நகரில்  தொடங்கி நடைபெற்று வருகிறது. கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய ஏழு உறுப்பு நாடுகள் மட்டுமே கொண்ட இந்த மாநாட்டில் இந்தியா, ஆஸ்திரேலியா, பிரேசில்,  இந்தோனேஷியா, தென்கொரியா, மியான்மர், குக் தீவுகள் ஆகிய நாடுகள் சிறைப்பு விருந்தினர்களாக பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது. இந்தியா சார்பில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றுள்ளார். மோடி உலக நாடுகளின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஜி7 உச்சி மாநாட்டின் இடையே ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், ஜெர்மனி அதிபர் ஒலாப் ஸ்கோல்ஸ், தென்கொரிய அதிபர் யூன் சிக் இயோல், இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ உள்ளிட்ட தலைவர்களை தனித்தனியாகச் சந்தித்தார்.  

இந்நிலையில், ஜப்பான் பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி, பப்புவா நியூ கினியா சென்றார். பப்புவா நியூ கினியாவில், நாளை இந்தியா-பசிபிக் தீவுகள் ஒத்துழைப்புக்கான மன்றத்தின் மூன்றாவது உச்சிமாநாட்டை பிரதமர் தொகுத்து வழங்குகிறார். பப்புவா நியூ கினியாவிற்கு பயணம் மேற்கொள்ளும் முதல் இந்தியப் பிரதமர், நரேந்திர மோடி என்பது குறிப்பிடத்தக்கது.