பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - மக்கள் பீதி!

 
earth

தீவு நாடான பப்புவா நியூ கினியாவில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அலறி அடித்துக்கொண்டு வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். 

பப்புவா நியூ கினியா என்பது தென்மேற்கு பசிபிக் கடல்பகுதியில் அமைந்துள்ள ஒரு தீவு நாடாகும். இந்த நாட்டில் அடிக்கடி இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில், இன்று காலையில் அந்த நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நாட்டின் போர்ட் மார்ஸ்பை நகரில் இருந்து 443 கி.மீ. வடக்கில் இன்று காலை 6.19 மணிக்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பப்புவா நியூ கினியாவின் தலைநகரான போர்ட் மார்ஸ்பை நகரில் இருந்து 443 கி.மீ. வடக்கில் இன்று காலை 6.19 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தின் காரணமாக அந்நாட்டின் பல்வேறு பகுதிகளீல் கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் பீதியடைந்து தங்களது வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் மற்றும் உயிர்சேதம் தொடர்பான எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. இருந்த போதிலும் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.