"தடுப்பூசி போடலேனா உள்ள தூக்கி போட்ருவேன்" - மக்களை மிரட்டும் பிலிப்பைன்ஸ் அதிபர்!

 
பிலிப்பைன்ஸ் அதிபர்

உலக நாடுகளை 2 ஆண்டுகளாக கொரோனா அலறவிட்டுக் கொண்டிருக்கிறது. வல்லரசு நாடு, ஏழை நாடு, நடுத்தர நாடு என்றாலும் பாகுபாடு காட்டுவதில்லை. இஷ்டத்திற்கு புகுந்து விளையாடுகிறது. அதன் சமீபத்திய உருமாறிய வடிவம் தான் ஒமைக்ரான் எனும் மின்னல் வேக கொரோனா. இதுவரை உருமாறிய வகையில் மிகவும் அபாயகரமானதாகப் பார்க்கப்பட்டது டெல்டா. இந்தியாவில் 2ஆம் அலையை அது தான் உருவாக்கியது. இன்னமும் இங்கே தான் நீடிக்கிறது. பிரிட்டன், அமெரிக்கா, பிரான்ஸ், சீனா போன்ற பல்வேறு நாடுகளுக்கும் சென்றது.

“தடுப்பூசியா? ஜெயிலா? நீங்களே முடிவு பண்ணுங்க” – மக்களை மிரட்டிய பிலிப்பைன்ஸ் அதிபர்!

ஆனால் அதையே தூக்கி சாப்பிடும் அளவிற்கு அதிவேகமாகப் பரவுகிறது ஒமைக்ரான். ஒரே மாதத்தில் 100க்கும் மேற்பட்ட நாடுகள் பரவியுள்ளதே அதற்கு சாட்சி. ஒரேயொரு நல்லது என்னவென்றால் டெல்டா போல ஒமைக்ரான் ஆட்டிப் படைப்பதில்லை. வீட்டிலிருந்தபடியே அதிலிருந்து குணமடைந்துவிடலாம். இருப்பினும் இரட்டைக் குழல் துப்பாக்கியாக டெல்டாவும் ஒமைக்ரானும் சேர்ந்து தாக்குகின்றன. இதனால் தொற்று எண்ணிக்கை எதிர்பாரா விதமாக உயர்கின்றன. அமெரிக்கா, பிரிட்டன், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் அதிவேகமாக தொற்று எண்ணிக்கை உயர்ந்து வருகின்றன.

“தடுப்பூசியா? ஜெயிலா? நீங்களே முடிவு பண்ணுங்க” – மக்களை மிரட்டிய பிலிப்பைன்ஸ் அதிபர்!

இதனால் பூஸ்டர் டோஸ் போட்டுக்கொள்ள மக்களை அரசுகள் வலியுறுத்துகின்றன. ஆனால் பிலிப்பைன்ஸில் ஒரு டோஸ் கூட போடாமல் நிறைய பேர் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்.  இதனால் கடும் கோபமடைந்த அந்நாட்டு அதிபர் ரோட்ரிகோ டூர்ட்டே, தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் அல்லது நான் ஜெயிலுக்குள் தூக்கி போட்டுவிடுவேன் என மிரட்டியிருக்கிறார்.  தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத 1.3 கோடி மக்களை வீட்டிலிருந்து வெளியே வர வேண்டாம் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. மீறி வந்தால் கைது செய்யப்படுவார்கள் என அதிபர் எச்சரித்துள்ளார்.