வங்கதேசத்தில் உள்ள ரோஹிங்கியா அகதிகள் முகாமில் பயங்கர தீ விபத்து..

 
ரோஹிங்யா தீ விபத்து


வங்கதேசத்தில் உள்ள ரோஹிங்கியா அகதிகள் முகாமில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஆயிரக்கணக்கான வீடுகள் தீக்கிரையாகின.

வங்காளதேசம் மற்றும்  மியான்மர் எல்லையில் ரோஹிங்கியா அகதிகள் முகாம்கள் அமைந்துள்ளன. கடந்த 2017 ஆம் ஆண்டு முதல்  மியான்மரில் இருந்து தப்பிவந்த மக்கள், வங்கதேசம் - மியான்மர் எல்லையில் உள்ள  காக்ஸ் பஜாரில் முகாம்கள்  அமைக்கப்பட்டு  தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த முகாம்களில் சுமார் 8 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரோஹிங்கியா  மக்கள் வசித்து வருகின்றனர்.  இந்த  முகாம்களில்  போதிய வசதிகளின்றி, மூங்கில் மற்றும் தார்பாய் போன்றவற்றாலே வீடுகள் அமைக்கப்பட்டிருக்கும்.

ரோஹிங்கியா தீ விபத்து

இந்நிலையில் நேற்று முகாமின் ஒரு பகுதியில் பயங்கர   தீ விபத்து ஏற்பட்டுள்ளது.  ஒரு வீட்டில் பயன்படுத்தப்பட்டு வந்த கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. தீ அடுத்தடுத்து அருகிலுள்ள வீடுகளுக்கும் பரவியதால், முகாமில் இருந்த சுமார்  1,200 குடிசைகள் தீக்கிரையாகின.  தகவலறிந்து சென்ற தீயணைப்பு வீரர்கள், சுமார் 2 மணிநேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் குடியிருப்புகளை இழந்து தவித்து வருகின்றனர்.

ரோஹிங்கியா தீ விபத்து

வீடுகள் மட்டுமின்றி, பாடசாலைகள் மற்றும் மருத்துவ மையங்களும் தீயில் எரிந்து நாசமாகின. நல்வாய்ப்பாக தீ விபத்தில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.  ஆனால் ஏராளமானோர்  தீயில் சிக்கி படுகயமடைந்துள்ளனர். மேலும்  தீ விபத்து  குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  ரோஹிங்கியா அகதிகள் முகாமில் அடிக்கடி தீ விபத்துகள் நிகழ்ந்து வருகின்றன. இதேபோன்று கடந்த ஆண்டிலும் பல முறை அகதிகள் முகாமில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் கூட  முகாமில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் தீ விபத்தும் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.