இந்திய வீரர்கள் தங்கிய ஹோட்டல் அருகே குண்டுவெடிப்பு - நடந்தது என்ன?

 
உகாண்டா குண்டுவெடிப்பு

ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பயங்கரவாத தாக்குதலை அரங்கேற்றி வருகின்றனர். மனித வெடிகுண்டு தாக்குதல், தற்கொலைப்படை தாக்குதல் என பல உயிர்களைக் காவு வாங்குகின்றனர். தற்போது உகாண்டா நாட்டில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பை நிகழ்த்தியுள்ளனர். குறிப்பாக இந்திய வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு வெளியே இச்சம்பவம் நடந்திருப்பது தான் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆம் நாட்டின் தலைநகர் கம்பாலாவில் சர்வதேச பாரா பேட்மிண்டன் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

Suicide bombings leave three dead in Uganda - Newspaper - DAWN.COM

இதில் கலந்துகொள்ள சென்ற இந்திய பாரா பேட்மிண்டன் வீரர்கள் 50க்கும் மேற்பட்டோர் கம்பாலாவில்தான் தங்கியுள்ளனர். இவர்களில் 9 பேர் தமிழ்நாட்டு வீரர்கள். இவர்கள் அனைவரும் தங்கியிருந்த ஹோட்டலிலிருந்து 100 மீட்டர் தொலைவில்தான் அடுத்தடுத்து மூன்று தற்கொலைப்படை தாக்குதல்கள் நிகழ்ந்திருக்கின்றன. இருப்பினும் நல்வாய்ப்பாக குண்டுவெடிப்பு சம்பவங்களில் இந்திய வீரர்கள் அனைவரும் உயிர் தப்பினர். தற்போது அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் இந்திய வீரர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என இந்திய பாரா - பேட்மிண்டன் அணி தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. மேலும் பயிற்சியாளர் பத்ரிநாத் குண்டுவெடிப்பு வீடியோவைப் பகிர்ந்து, வீரர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறார்கள். பெற்றோர்கள், உறவினர்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என கூறியுள்ளார். தற்போது இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. இதில் மூன்று பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்கள் மூவரும் பயங்கரவாதிகள் எனவும் சொல்லப்பட்டுள்ளது.