தைவான் மீது சீனா படையெடுத்தால் அமெரிக்கா பதிலடி கொடுக்கும் - அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை..

 
தைவான் மீது சீனா படையெடுத்தால் அமெரிக்கா பதிலடி கொடுக்கும் - அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை..

தைவான் மீது சீனா தாக்குதல்  நடத்தினால் தக்க பதிலடி  கொடுக்கப்படும் என  அமெரிக்கா பகிரங்கமாக எச்சரித்திருக்கிறது.

சீனாவிடம் இருந்து பிரிந்து தனிநாடாக செயல்பட்டு வரும் தைவான் மீது , அந்நாட்டுக்கு நீண்டகாலமாகவே அதிருப்தி இருந்து வருகிறது.  தைவானை மீண்டும் தன்னுடன் இணைத்துக்கொள்ளும்  தருணத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் சீனாவுக்கு,  அமெரிக்கா செய்த ஒரு செயல் மீண்டும் தைவான் மீது ஆத்திரத்தை அதிகரிக்கச் செய்தது. ஆம்.,  அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி   சீனாவின் கடும் எதிர்ப்பை மீறி,   கடந்த மாதம் தைவானுக்குச் சென்று பரபரப்பை ஏற்படுத்தினார்.  இதனால் கடும் ஆத்திரமடைந்த சீனா,  தைவான் உற்பத்தி பொருட்களுக்கு தடை விதித்தது.

தைவான் மீது பொருளாதார தடை விதித்த சீனா.. எல்லையில் போர் பயிற்சிகள் செய்வதால் பதற்றம்..

அத்துடன்  தைவான் எல்லையை சுற்றி 6 பகுதிகளில் சீனா தீவிர ராணுவ பயிற்சிகளை மேற்கொண்டது.   தைவானின் வடகிழக்கு மற்றும் தென்மேற்கு கடற்கரையை ஒட்டிய பகுதிகளில், கடந்த மாதம்  சீனா 10க்கும் மேற்பட்ட அதிநவீன ஏவுகணைகளை வீசி சோதனை செய்தது. தொடர்ந்து  தைவான் எல்லையில் போர் பயிற்சியில் ஈடுபட்டு மறைமுக தாக்குதல் எச்சரிக்கை விடுத்திருந்தது.  ஆனாலும் அமெரிக்க எம்.பிக்கள், ஆளுநர்கள் தைவானுக்கு பயணம் செய்த வண்ணம் இருக்கின்றனர். அத்துடன் இத்தகைய பதற்றமான சூழலில்,  தைவானுக்கு சுமார் ரூ. 8,800 கோடி  மதிப்பிலான அதிநவீன  ஆயுதங்களை விற்பனை செய்ய அமெரிக்க ஒப்பந்தம் போட்டிருக்கிறது.  
 தைவான் மீது சீனா படையெடுத்தால் அமெரிக்கா பதிலடி கொடுக்கும் - அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை..
இந்த அமெரிக்கா - சீனாவுக்கு இடையேயான மோதல்,  தைவான் - சீனா இடையே போர் மூளுவதற்கான பதற்றத்தை மேலும் அதிகரித்திருக்கிறது. இந்நிலையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற  அமெரிக்க அதிபர் ஜோ பைடன்,  தைவான் மீது சீனா படையெடுப்பு நடத்தினால் அமெரிக்க படை வீரர்கள் தைவானை பாதுகாப்பார்கள் என்று பகிரங்கமாக கூறினார்.  ஆனால்  அதன்பிறகு  பேசிய வெள்ளைமாளிகை அதிகாரி,  தைவான் மீதான அமெரிக்காவின் நிலைபாட்டில் எந்த மாற்றமும் இல்லை எனவும்,  தைவான் தன்னை தானே தற்காத்துக்கொள்ள மட்டுமே அமெரிக்கா ராணுவ உதவி செய்யும் என்று அவர் விளக்கமளித்தார்.