முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது- சிபிஐ அதிரடி
இலங்கை நாட்டின் முன்னாள் அமைச்சரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (EPDP) செயலாளருமான கே.என். டக்ளஸ் தேவானந்தாவை குற்றப் புலனாய்வுத் துறை (CID) இன்று கைது செய்துள்ளது.

அரசியல்வாதிகளின் பாதுகாப்பிற்காக வழங்கப்பட்ட பிஸ்டல் ஒன்று பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த மாக்கந்துர மதுஷிடம் சென்றது தொடர்பான விசாரணைக்காக, இன்று காலை டக்ளஸ் தேவானந்தா CID அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார். அங்கு மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணைகளுக்கு பின்னர் அவர் கைது செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன. அதேவேளை, இறுதி யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியிலும், குறிப்பாக 2006 ஆம் ஆண்டு யுத்தம் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்திலும், யாழ்ப்பாணம் மற்றும் அதனைச் சுற்றிய பகுதிகளில் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் கடத்தப்பட்ட சம்பவங்கள்,மற்றும் காணாமல் போன சம்பவங்கள் தொடர்பாக மனித உரிமை ஆணையத்தில் டக்ளஸ் தேவானந்தா மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
அந்த வழக்குகளில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் முன்னாள் அமைச்சர் மீது நேரடி குற்றச்சாட்டுகளை முன்வைத்து, சாட்சியங்களையும் அளித்திருந்ததாக மனித உரிமை ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


