இனி ட்வீட்டுகளுக்கு கட்டணம்..!! எலான் மஸ்கின் அதிரடி திட்டம்..

ட்விட்டர் நிறுவனத்தை கைப்பற்றியுள்ள எலான் மஸ்க், இனி சில ட்விட்களுக்கு பணம் வசூலிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன..
ஸ்பேஸ் எக்ஸ்., டெஸ்லா நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரியும், உலகிலேயே மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவராகவும் இருப்பவர் எலான் மஸ்க். இவர் அண்மையில் சத்தமில்லாமல் டிவிட்டர் நிறுவனத்தை முழுவதுமாக கைப்பற்றியிருக்கிறார். கடந்த சில நாட்களாகவே ட்ரெண்டிங்கில் இருந்துவரும் செய்தியே இதுதான். முதலில் சுமார் 9.2 சதவீத பங்குகளைக் மட்டுமே எலான் மஸ்க் வாங்கியிருந்தார். ட்விட்டர் நிறுவனத்தின் போர்டு மெம்பராக இருந்து வந்த அவரால் , 14.9 சதவீத பங்குகளை மட்டுமே வாங்க முடியும்.
இந்த பங்கை வைத்துக்கொண்டு ட்விட்டரின் நிர்வாக முடிவுகளில் அவரால் ஆதிக்கம் செலுத்த முடியாது. ஆகையால் ட்விட்டர் நிறுவனத்தையே வாங்க எலான் மஸ்க் முடிவெடுத்தார். அதன்படி ஒவ்வொரு ட்விட்டர் பங்குக்கும், தலா 4 ஆயிரத்து 154 ரூபாய் என மொத்தம் 3 லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ட்விட்டர் நிறுவனத்தை வாங்க அவர் ஒப்பந்தம் செய்துள்ளார். இந்த பணத்தை அவர் எப்படித் திரட்டப் போகிறார் என்கிற கேள்வி அனைவரிடத்திலும் இருந்தது. அதற்கான விடை தற்போது வெளியாகியிருக்கிறது.
ட்விட்டரை வாங்குவதற்காக, டெல்ஸா நிறுவனத்தின் பங்குகளை சுமார் 63 ஆயிரம் கோடி ரூபாய்க்கு எலான் மஸ்க் விற்றிருக்கிறர். மேலும், டெஸ்லா நிறுவனத்தின் பங்குகளை அடமானம் வைத்து சுமார் 93 ஆயிரம் கோடி ரூபாயும், ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதற்காக கடனாக 95 ஆயிரம் கோடி ரூபாயும் எலான் மஸ்க் வாங்கியிருக்கிறார். கடனை திருப்பிச் செலுத்துவதாகக் கோரிய வழிமுறைகளில் ஒன்றாக சில குறிப்பிட்ட ட்விட்களுக்கு பணம் வசூலிக்க திட்டமிட்டுள்ளதாக, எலான் மஸ்க் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதாவது, புகைப்படம், வீடியோ உள்ளிட்ட பதிவுகளுடன் பிற இணையதளங்களை இணைக்கும் வகையில் பதிவிடப்படும் எம்பெடட் ட்விட்களுக்கு பணம் வசூலிக்க உள்ளதாக, கடன் வழங்கும் நிறுவனங்களிடம் எலான் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. அத்துடன் , ட்விட்டரில் சில பணியாளர்களை நிறுத்தவும், இயக்குநர்களின் ஊதியத்தை குறைக்கவும் எலான் மஸ்க் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.