ராணுவ அமைச்சர் 3 வாரங்களாக மாயம்? விசாரணை என்ற பெயரில் சீனா அராஜகம்

சீன அதிபர் ஜி ஜின்பிங் அரசில் ராணுவத்துறை அமைச்சராக இருந்தவர், கடந்த மூன்று வாரங்களாக மாயமாகியிருக்கும் செய்தி இப்போது உலகம் முழுவதும் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
ஏற்கனவே தனக்கு எதிரான ராணுவ தளபதிகளையும், அரசியல் எதிரிகளையும் ஜி ஜின்பிங் காணாமால் ஆக்கி வருவதாக அதிர்ச்சி குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில், ராணுவ அமைச்சர் மாயமாகியிருப்பதை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கேள்வி எழுப்பியுள்ளன. கடந்த ஜூலை மாதம் சீன வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த குயின் கேங் திடீரென்று மாயமாகி பொது நிகழ்ச்சிகளை தவிர்த்து வந்த நிலையில், புதிய வெளியுறவுத்துறை அமைச்சராக வாங்யீ நியமிக்கப்பட்டார். இதனால் ராணுவ அமைச்சர் லீ ஷாங்பூ மாயமாகி இருப்பது ஜி ஜின்பிங் மீதான சந்தேகத்தை வலுப்படுத்துவதாக சர்வதேச நிபுணர்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
கடந்த மார்ச் மாதம் முதல் சீன ராணுவ அமைச்சராக பதவி வகித்து வந்த லீ ஷாங்பூ, கடந்த மூன்று வாரமாக பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காமலும், அரசு நிர்வாக விவகாரங்களிலும் கலந்து கொள்ளாமலும் உள்ளார். அவர் எங்கு உள்ளார் என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படாத நிலையில், அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் சந்தேகம் எழுப்பியுள்ளன. சீன ராணுவ அமைச்சர் லீ ஷாங்பூ, ஊழல் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க அரசாங்கம் நம்புவதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். லீ ஷாங்பூ, ரகசிய இடத்தில் சீன அதிகாரிகளால் விசாரணை வளையத்தில் இருப்பதாகவும், ஆயுத கொள்முதலில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரில் இந்த விசாரணை நடத்தப்படுவதாகவும் சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் 8 மூத்த அதிகாரிகளும் விசாரணை வளையத்தில் உள்ளனர். மேலும் அவர் வீட்டு காவலில் வைக்கப்பட்டு உள்ளதாகவும் மற்றொரு தகவல் வெளியாகி உள்ளது.
லீ ஷாங்பூ, கடைசியாக கடந்த ஆகஸ்ட் 29-ந் தேதி பீஜிங்கில் நடந்த ஆப்பிரிக்க நாடுகளுடனான பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றினார். அதன்பிறகு அவரை காணவில்லை என்பது சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.