விமானத்தில் சக பயணியை தாக்கிய மைக் டைசன்.. வைரலாகும் வீடியோ..
முன்னாள் சாம்பியனும் பிரபல குத்துச்சண்டை வீரருமான மைக் டைசன், விமானத்தில் சக பயணி ஒருவரை சரமாரியாக தாக்கும் வீடியோ சமூக வலைதங்களில் வைரலாகி வருகிறது. இதனையடுத்து பலரும் மைக் டைசன் பொறுமை காத்திருக்க வேண்டும் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பிரபல குத்துசண்டை வீரரான மைக் டைசன் நேற்று முன் தினம் இரவு அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் இருந்து போர்ட் லாடர்டேல் நகருக்கு விமானத்தில் பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது மைக் டைசனை அடையாளம் கண்டுகொண்ட சக பயணிகள் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள விரும்பியுள்ளனர். அவரும் சளைக்காமல் விரும்பியவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அதே விமானத்தில் நண்பர்களான 2 இளைஞர்கள் பயணித்துள்ளனர்.அவர்களில் ஒருவர் டைசனுடன் போட்டோ எடுத்துக்கொள்ள, மற்றொருவர் மைக் டைசனை பார்த்த மகிழ்ச்சியில் ஆழ்ந்துபோனார்.
தொடர்ந்து அவர் உணர்ச்சி வசப்பட்டு குதித்ததோடு, அங்கும் இக்குமாய் அலைந்த வண்ணமே இருந்துள்ளார். அத்துடன் மைக் டைசனுக்கு பின்னால் உள்ள இருக்கையில் இருந்தவாறு அவரிடம் பேசிக்கொண்டே இருந்துள்ளார். எரிச்சலடையும் வகையில் தொந்தரவு கொடுத்துக்கொண்டே இருந்ததாக கூறப்படுகிறது. இதையெல்லாம் அவரது நண்பர் செல்ஃபோனில் வீடியோவாக பதிவு செய்துகொண்டே இருந்திருக்கிறார். அப்போது பொறுமையிழந்த மைக் சைடன் பின்னால் இருந்த அந்த பயணியின் முகத்தில் சரமாரியாக குத்து விட்டுள்ளார்.
Imagine being dumb enough to provoke Mike Tyson in the close proximity of a plane during a 3 hour flight😂😭🤦🏽♂️ pic.twitter.com/T3IBuB7lor
— 🛸🐐Ziggy B🐐🛸 (@therealziggyb23) April 21, 2022
இதில் அந்த பயணியின் முகத்தில் ரத்தமே வந்துவிட்டதாம்.. மைக் டைஸன் அவரிடம் அமைதியாக இருக்கும்படி பலமுறை கூறியும், அவர் கத்தியபடியும், தொந்தரவு செய்த படியுமே இருந்ததாக சக பயணிகள் கூறுகின்றனர். இதனையடுத்து மைக் டைசன் விமானம் கிளம்புவதற்கு முன்னதாகவே விமானத்தில் இருந்து வெளியேறியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மைக் டைசன் சக பயணியை தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.