‘ஒரு மணி நேரம் கெடு வைத்த மாணவர்கள்..’ அடிபணிந்த உச்சநீதிமன்ற நீதிபதி பதவி விலகல்..

 
Bangladesh Chief Justice Obaidul Hassan

 வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டத்திற்கு பணிந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஒபய்துல் ஹசன் பதவி விலகியுள்ளார். 

வங்கதேசத்தில் அரசு வேலைகளில் சுதந்திர போராட்ட தியாகிகளின்  வாரிசுகளுக்கு 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என்கிற அரசின் அறிவிப்பை எதிர்த்து மாணவர்கள் அமைப்பினர் போராட்டத்தில் குதித்தனர். அவர்கள் மீது  ஆளும் கட்சியினர் தாக்குதல் நடத்தியதால் அங்கு கலவரம் மூண்டதோடு,  பல இடங்களில் வன்முறை வெடித்தது. இடஒதுக்கீட்டு சலுகையை 5% ஆக குறைத்து அந்நாட்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தும்,  நாடு முழுவதும் கடுமையான ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டும் பலனில்லை.  வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள அமைச்சர்களின் வீடுகள் மற்றும் பிரதமர் அலுவலகங்களை சூரையாடிய போரட்டக்காரர்கள்,  அத்துடன் வங்க தேசத்தின் தந்தை என்றழைக்கப்படுபவரும், ஷேக் ஹசீனாவின் தந்தையுமான ஷேக் முஜ்பூர் ரஹ்மானின் சிலையையும் உடைத்து தள்ளினர்.  

Bangladesh Chief Justice Obaidul Hassan

நாடு முழுவதும் நிலவிய உச்சகட்ட பதற்றம் காரணமாக  வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, பதவியை ராஜினாமா செய்துவிட்டு  தப்பி வந்து இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார். இதனையடுத்து அந்நாட்டு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, ராணுவ ஆட்சி அமலானது. இதனையடுத்து நேற்று  முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு பதவியேற்றது.  அதேநேரம் ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறி 4 நாட்கள் ஆகியும், ராணுவம் பலக்கட்ட கோரிக்கைகளை முன்வைத்தும் அங்கும் போராட்டம் கட்டுக்குள் வரவில்லை. 

அவாமி லீக் கட்சியின் தலைவர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் காவல் நிலையங்களை குறிவைத்து வன்முறை வெறியாட்டங்களை நடத்தி வருகின்றனர். வங்கதேசத்தில் நிகழும் வன்முறையால் 50 காவலர்கள் உள்பட மாணவர்கள் என 469 பேர்  இதுவரை உயிரிழந்துள்ளனர்.   இந்த நிலையில் தலைமை நீதிபதி பதவி விலக கோரி வங்கதேச உச்ச நீதிமன்றத்தை மாணவர்கள் முற்றுகையிட்டதால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது. உச்சநீதிமன்றத்தை முற்றுகையிட்டு நீதிபதி பதவி விலக ஒரு மணி நேரம் மாணவர்கள் கெடு விதித்திருந்தனர். இந்நிலையில் மாணவர்களின் கோரிக்கையை ஏற்று வங்கதேச உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஒபய்துல் ஹசைன் பதவி விலகி இருக்கிறார்.