உணவில் இறந்து கிடந்த எலி.. தெரியாமல் அதன் தலையை கடித்த இளைஞர். - சூப்பர் மார்க்கெட் மீது வழக்கு ...

 
உணவில் எலி


ஸ்பெயின் நாட்டில்  இளைஞர் ஒருவர் வாங்கிய உணவுப் பொருளில்  இறந்த எலி இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெளிநாடுகளில் பெரும்பாலும்  உணவுப் பொருட்களை பதப்படுத்தி, குளிர்பதன பெட்டிகளில் அடைத்து வைத்தே  காய்கறிகள், இறைச்சிகள் விற்பனை செய்யப்படுகின்றன.  அப்படி விற்பனை செய்யப்படும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களையே பொதுமக்கள் சூப்பர் மார்க்கெட்டுகளில் இருந்து வாங்கிச்சென்று சமைத்து சாப்பிடுவர்.  பணிக்குச் செல்லும் பலரும் நேரமின்மையால், இத்தகைய இன்ஸ்டண்ட் உணவுப் பொருட்களையே விரும்பி வாங்குவர்..

பதப்படுத்தப்பட்ட உணவுகள்

இதுபோன்ற பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களில்  பூச்சிகள், பல்லிகள் போன்றவை இருப்பதை  நாம் கேள்விப்பட்டிருப்போம்.. இதுபோன்ற சம்பவங்கள்  பேங்கிங் செய்யும்போதோ அல்லது உணவுப் பொருட்களை தயார் செய்யும்போதோ  தவறுதலாக நிகழும்..  ஆனால் ஸ்பெயினில்  தவறுதலாக உணவுப் பொருளில்  செத்த எலியே  இருந்திருக்கிறது.

ஸ்பெயினைச் சேர்ந்த ஜூவான் ஜோஸ் என்ற இளைஞர் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் இருந்து  காய்கறிகள் உள்ளிட்ட உணவுப் பொருட்களை வாங்கியிருக்கிறார். அதனை சமைத்து முடித்து தட்டில் வைத்தும் அவர் சாப்பிட்டிருக்கிறார்.  அப்போது தான் வித்தியாசமாக ஏதொ ஒன்றை சாப்பிடுவதாக உணர்ந்த அவர்,  முதலில் அதனை முள் முட்டைகோஸ் என எண்ணினாராம்.  பின்னர் தட்டில் இரண்டு கண்கள் போன்று ஒன்று இருப்பதை பார்த்து அவர் அதிர்ச்சியடைந்திருக்கிறார்.

பதப்படுத்தப்பட்ட உணவுகள்

பின்னர் அக்கம்பத்தினரிடம் அதை அவர் காட்டியிருக்கிறார். பின்னர்தான் அது இறந்துபோன எலி என்பது தெரியவந்திருக்கிறது. மேலும் தவறுதலாக  காய்கறி என நினைத்து அவர் அந்த எலியின் தலையை கடித்து சாப்பிட்டுவிட்டதாகவும் அந்த இளைஞர் தெரிவித்திருக்கிறார்.  இதனையடுத்து அந்த சூப்பர் மார்க்கெட்டின் மீது ஜூவான் ஜோஸ் வழக்கு போட்டுள்ளார்.  சம்பந்தப்பட்ட உணவுப்பொருள் சப்ளையரை தொடர்புகொண்டு விசாரித்ததை அடுத்து,  இனி உணவுப் பொருட்களை  சரியான முறையில் பரிசோதனைக்கு பிறகு வழங்கப்படும் என சூப்பர் மார்க்கெட் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.