கொரோனா தடுப்பூசியால் வழக்கமான தடுப்பூசியில் தொய்வு கூடாது - WHO

 
who

கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியின் காரணமாக வழக்கமான தடுப்பூசிகள் செலுத்துவதில் தொய்வு ஏற்பட கூடாது என தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு சீனாவின் ஹூஹான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. தற்போது அந்த வைரஸின் தாக்கம் குறையவில்லை. டெல்டா, டெல்டா பிளஸ், ஓமைக்ரான் என பல்வேறு விதமாக வைரஸ் தொடர்ந்து உருமாற்றம் அடைந்துகொண்டே செல்கிறது. கொரோனாவுக்கு எதிரான பேராயுதமாக தடுப்பூசி விளங்கி வருகிறது. தொற்று பவலை தடுப்பதில் திறம்பட செயல்படாவிட்டாலும், இறப்பு விகிதத்தை தடுப்பூசி பெருமளவில் குறைத்து வருகிறது. இதன் காரணமாக உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசிக்கு முன்னுரிமை அளித்து செலுத்தப்பட்டு வருகிறது.

vaccine

இந்நிலையில், கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியின் காரணமாக வழக்கமான தடுப்பூசிகள் செலுத்துவதில் தொய்வு ஏற்பட கூடாது என தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது. இதுதொடா்பாக, உலக சுகாதார நிறுவனத்தின் தென்கிழக்கு ஆசிய பிராந்திய இயக்குநா் பூனம் கேத்ரபால் சிங் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:  தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இதுவரை சுமார் 300 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. கரோனா தடுப்பூசி திட்டத்துக்கு அதிக கவனம் செலுத்தும் அதேவேளையில் வழக்கமான தடுப்பூசி திட்டங்களிலும் அக்கறை காட்டப்பட வேண்டும். அனைத்து குழந்தைகளுக்கும் உயிர்காக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும். இந்தியாவை பொருத்தவரை, 2020-இல் வழக்கமான தடுப்பூசி திட்டங்களில் தொய்வு ஏற்பட்டது.  வழக்கமான தடுப்பூசி திட்டங்கள் கொரோனாவுக்கு முந்தைய காலகட்டத்தைபோல மீண்டும் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும். இதற்கு தேவையான ஆதரவை உலக சுகாதார நிறுவனம் அளிக்கும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.