உக்ரைனின் கிழக்கு பகுதிகளை தங்கள் நாட்டுடன் இணைக்க ரஷ்யா திட்டம் - அமெரிக்கா குற்றச்சாட்டு

 
us russia

உக்ரைனின் கிழக்கு பகுதிகளை தங்கள் நாட்டுடன் இணைக்க ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. 

நேட்டோ அமைப்பில் இணைய முயற்சித்தது மற்றும் மேற்கத்திய நாடுகளுடன் உறவு வைத்தது உள்ளிட்ட உக்ரைன் நடவடிக்கைகளால் ஆத்திரம் அடைந்த ரஷ்யா உக்ரைன் நாட்டின் மீது கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி போரை தொடங்கியது. இரண்டு மாதத்தை கடந்தும் போர் நடைபெற்று வரும் நிலையில், இதனால் பெரும் பொருட்சேதம் மற்றும் உயிர்சேதம் ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர். ரஷ்யாவின் கொடூர தாக்குதலுக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. உக்ரைனுக்கு உதவிக்கரம் நீட்டி வரும் உலக நாடுகள், ரஷ்யாவிற்கு எதிர்வினையாற்றும் வகையில் பொருளாதார தடைகளை விதித்துள்ளன. போரை நிறுத்துவது தொடர்பாக பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற போதிலும் அதில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. 

russia

இந்நிலையில், உக்ரைனின் கிழக்கு பகுதிகளை தங்கள் நாட்டுடன் இணைக்க ரஷ்யா திட்டமிட்டு வருவதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது. லுஹான்ஸ்க், டொனெட்ஸ்க் உள்ளிட்ட உக்ரைனின் கிழக்கு பகுதிகளை இம்மாதத்தில் ரஷ்யாவுடன் இணைக்கவும், இதற்கான வாக்கெடுப்பை நடத்தவும் ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்புக்கான அமெரிக்க தூதர் மைக்கேல் கார்பென்டர் தெரிவித்துள்ளார். இதேபோன்று, உக்ரைனின் முக்கிய துறைமுக நகரமான கெர்சன் நகரையும் சுதந்திர குடியரசாக அங்கீகரிக்க ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ள அவர், உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆதிக்க நடவடிக்கைகளை அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் ஒருபோதும் அங்கீகரிக்காது என தெரிவித்துள்ளார். கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைன் நகர மேயர்கள், அதிகாரிகள் கடத்தப்பட்டுள்ளதும், அங்கு இணையம் மற்றும் செல்போன் சேவைகள் துண்டிக்கப்பட்டிருப்பதும் ரஷ்யாவின் நடவடிக்கைகளை உறுதிபடுத்துவதாக அவர் சுட்டிக்காட்டினார்.