அல்கொய்தா அமைப்பின் தலைவர் டிரோன் தாக்குதலில் பலி - அமெரிக்கா அறிவிப்பு

 
Al Qaeda

ஒசாமா பின்லேடனுக்கு பிறகு அல்கொய்தா அமைப்பை வழி நடத்திய அய்மான் அல் ஜவாஹிரி டிரோன் தாக்குதலில் கொலை செய்யப்பட்டதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். 

ஆப்கானிஸ்தானில் தீவிரவாத கும்பலுக்கு எதிராக  20 வருடமாக போர் நடத்தி வந்த அமெரிக்க படைகள் கடந்த வருடம் அங்கிருந்து வெளியேறின. அமெரிக்க படைகள் வெளியேறிய உடனேயே தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியை பிடித்தனர். அமெரிக்க படைகள் வெளியேறி ஒரு வருடத்திற்கு மேல் ஆகியுள்ள நிலையில், அல்கொய்தா இயக்கத்தின் தலைவர் அல் ஜவாஹிரி இன்று நடந்த டிரோன் தாக்குதலில் கொல்லப்பட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. 

afgan

காபூலில் நடத்திய டிரோன் தாக்குதலில் அல் கொய்தா தலைவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.  சிஐஏ நடத்திய டிரோன் தாக்குதலில் அல் கொய்தா தலைவர் கொலை செய்யப்பட்டதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். அவனது தலைக்கு 25 மில்லியன் டாலர் வெகுமதி வழங்குவதாக ஏற்கனவே அமெரிக்கா அறிவித்திருந்த நிலையில் அவன் கொல்லப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒசாமா பின்லேடனுக்கு பிறகு அல்கொய்தா அமைப்பை வழி நடத்திய அய்மான் அல் ஜவாஹிரி, பல்வேறு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வந்ததோடு, பல பயங்கரவாத தாக்குதல்களுக்கு மூளையாக செயல்பட்டு வந்தான். இந்நிலையில்,  அய்மான் அல் ஜவாஹிரி டிரோன் தாக்குதலில் உயிரிழந்தது குறித்த அறிவிப்பை அமெரிக்க அதிபர் பிடன் இன்று வெள்ளை மாளிகையில் வெளியிட்டார்.