குரங்கம்மையால் இருவர் உயிரிழப்பு - உலக நாடுகள் அதிர்ச்சி

 
Monkeypox death

ஆப்ரிக்காவிற்கு வெளியே முதல் முறையாக குரங்கம்மையால் பாதிக்கப்பட்ட இருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கொரோனா வைரஸை தொடர்ந்து தற்போது குரங்கம்மை நோய் உலகை அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய் ஆப்ரிக்கா நாடுகளில் மட்டுமே பரவி  வந்த சிலையில், கடந்த மே மாதம் தொடங்கி ஐரோப்பா உள்ளிட்ட மற்ற நாடுகளுக்கு பரவத் தொடங்கியது. உலகம் முழுவதும் 70க்கும் மேற்பட்ட நாடுகளில் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் குரங்கம்மையின் தாக்கம் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.பாதிப்பில் 70 சதவீதம் ஐரோப்பாவிலும், 25 சதவீதம் அமெரிக்காவிலும் ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்பானது குழந்தைகள் மத்தியிலும் பரவி வருவது ஆய்வில் தெரியவந்துள்ளது. இதுவரை சுமார் 80 குழந்தைகளுக்கு குரங்கம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதேபோல் குரங்கம்மை நோய் உலக சுகாதார அவசரநிலையை ஏற்படுத்தியுள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. 

monkeypox

இந்நிலையில், இந்த நோய் பாதித்த ஒருவர் பிரேசில் நாட்டில் உயிரிழந்துள்ளார். இவருக்கு வயது 41. இதன் மூலம் ஆப்ரிக்கா நாட்டிற்கு வெளியே முதல்முறையாக குரங்கம்மை பாதிப்பு காரணமாக உயிரிழப்பு தற்போது ஏற்பட்டுள்ளது.பிரேசில் நாட்டில் இதுவரை சுமார் ஆயிரம் பேருக்கு குரங்கம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  இதேபோல் ஸ்பெயின் நாட்டிலும் ஒருவர் குரங்கம்மை பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். குரங்கம்மையால் ஐரோப்பாவில் ஏற்பட்ட முதல் உயிரிழப்பு இதுவே. அந்நாட்டிலும் இதுவரை 4,000-க்கும் மேற்பட்டோருக்கு குரங்கம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.