#RIPTwitter.. அதிருப்தியில் வெளியேறும் ஊழியர்கள்..

எலான் மஸ்கின் செயலால் அதிருப்தி அடைந்த நூற்றுக்கணக்கான ட்விட்டர் ஊழியர்கள், தங்களது வேலையை ராஜினாமா செய்து வருகின்றனர்.
Twitter நிறுவனத்தை வாங்கிய கையோடு எலான் மஸ்க், மூத்த நிர்வாகிகளை உடனடியாக பணி நீக்கம் செய்தார். அதன் தொடர்ச்சியாக ஊழியர்களின் சரிபாதி பேரையும் வேலையில் இருந்து வெளியேற்றினார். மேலும், ட்விட்டரை புதுப்பிக்கும் பணிக்கு நிர்ணயத்த காலக்கெடு வரை பொறியாளர்கள் நாள் ஒன்றுக்கு 12 மணி நேரமும், வாரத்தின் 7 நாட்களும் பணியாற்ற வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அத்துடன் வீட்டிலிருந்து வேலை செய்யும் முறையும் நிறுத்தப்பட்டது. இதனை ஒட்டி எலான் மஸ்க், ஊழியர்களுக்கு அனுப்பிய இ-மெயிலில் ‘நீண்ட நேரம் வேலை செய்யப் போகிறீர்களா? அல்லது மூன்று மாத சம்பளத்துடன் வீட்டிற்கு செல்கிறீர்களா?’ என இரண்டு நாட்களுக்குள் பதில் அளிக்குமாறு கேட்டிருந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் பலர் தங்களது வேலையை ராஜினாமா செய்து வருகின்றனர்.
உலகம் முழுவதும் ட்விட்டரில் பணியாற்றும் நூற்றுக்கும் மேற்பட்டோர் வேலையை விட தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. ட்விட்டர் பக்கத்திலேயே தங்களது ராஜினாமாவை தெரிவித்துள்ள ஊழியர்கள், அந்த பதிவுகளில் பாய் பாய் ட்விட்டர்(#ByeByeTwitter), ரெஸ்டின் பீஸ் ட்விட்டர் ( #RIPTwitter)போன்ற ஹேஷ்டேக்குகளை பதிவிட்டு வருகின்றன. இந்த ஹேஷ்டேகுகள் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகி வருவதோடு, எண்ணற்ற மீம்ஸ்களும் வெளியாகி வருகின்றன. மேலும், இது தொடர்பாக ட்விட்டர் ஊழியர்களிடையே நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் 50 % அதிகமான ஊழியர்கள் வேலையை விட்டுவிட முடிவெடுத்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.
அதுமட்டுமின்றி, ட்விட்டரை எலான் மஸ்க் வாங்கிய பிறகு பணி நிரந்தரம் குறித்த அச்சம் அதிகரித்திருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் ட்விட்டரின் பல்வேறு அலுவலகங்கள் ஆள்பற்றாக்குறை ஏற்பட்டு அந்த அலுவலகங்களையும் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. அதேநேரம் இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள எலான் மஸ்க், ‘சிறந்த ஊழியர்கள் தன்னோடு இருப்பதாகவும் அதனால் வெளியே செல்வோர் குறித்து கவலை இல்லை’ என்றும் தெரிவித்திருந்தார். அத்துடன் சலசலப்புக்கு மத்தியில் 21ஆம் தேதிக்குள் ட்விட்டரை புது பொலிவாக்கும் பணிகளிலும் எலான் மஸ்க் தீவிரம் காட்டி வருகிறார்.