டீசல் விலை லிட்டருக்கு ரூ. 40 குறைப்பு.. அதிரடி காட்டிய பாகிஸ்தான் அரசு..

 
petrol

 பாகிஸ்தான் அரசு அதிரடியாக  டீசல் விலையை  லிட்டருக்கு 40 ரூபாய் குறைத்திருக்கிறது.  சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்   விலை குறைந்து வருவதால்,  இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட இலங்கையை போன்றே,  பாகிஸ்தானில் விலைவாசி உயர்வு  தலைவிரித்தாடியது, இதனைக் கண்டித்து எதிர்க்கட்சிகள்  போர்க்கொடி உயர்த்தியதால்  பாகிஸ்தானில் கடந்த  ஏப்ரல் மாதம்   இம்ரான் கான்  தலைமையிலான அரசு கவிழ்ந்தது.  உக்ரைன் - ரஷ்யா போர்  சூழல் காரணமாக பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை  கடுமையாக அதிகரித்தது. இதுவே  இம்ரான் அரசு கவிழ்வதற்கு மிக முக்கிய காரணமாக   அமைந்தது.  அதன் பிறகு ஷபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு  ஆட்சிப் பொறுப்புக்கு வந்தது.   தற்போது புதிய ஆட்சி அமைந்து  3 மாதங்கள் நிறைவடைந்த நிலையில், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையும்  குறைந்து வருகிறது.  

 கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி

மார்ச் மாதத்தில் 120 டாலர் வரை அதிகரித்த கச்சா எண்ணெய் விலை தற்போது 97 டாலராக சரிவை கண்டிருக்கிறது.   இந்த கச்சா எண்ணெய் விலை சரிவின் பயன் மக்களை சென்றடையும் நோக்கில்,  பாகிஸ்தான் அரசு பெட்ரோல் , டீசல் விலையை அதிரடியாக குறைத்திருக்கிறது.  நேற்று முந்தினம் பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப்   டீசல் விலையில்  லிட்டருக்கு 40 ரூபாய் 54 காசுகளும்,   பெட்ரோல் விலையில்  லிட்டருக்கு 18 ரூபாய் 50 காசுகளும் குறைக்கப்படுவதாக  அறிவித்தார். விலை குறைப்பை உடனடியாக அமல்படுத்தவும்  பாகிஸ்தான் நிதி அமைச்சர் இஸ்மாயில்,  எண்ணெய் மற்றும் எரிவாயு ஒழுங்குமுறை ஆணையத்திற்கு அவர் உத்தரவிட்டார்.  

டீசல் விலை லிட்டருக்கு ரூ. 40 குறைப்பு.. அதிரடி காட்டிய பாகிஸ்தான் அரசு..

அதன்படி நேற்று முதல் இந்த புதிய விலை குறைப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது.  ஏற்கனவே பாகிஸ்தானின் அந்நிய செலாவணி கையிருப்பு கிட்டத்தட்ட முழுமையாக காலியாகி சர்வதேச நாணயத்திடம் கடன் வாங்க 1 மாதத்திற்கும் மேலாக முயற்சிகள்  மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.   ஆனால் இதுவரை கடன் கிடைக்கவில்லை.  இந்தச் சூழலிலும்  பாகிஸ்தான் அரசு துணிச்சலாக எரிபொருள் விலையை குறைத்திருப்பது அந்நாட்டு மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.