போரில் பங்கேற்க அதிபர் அழைப்பு.. குடும்பம் குடும்பமாக நாட்டை விட்டு வெளியேறும் ரஷ்ய மக்கள்..

 
putin

உக்ரைன் மீதான போரில் பங்கேற்க  10 லட்சம் மக்களுக்கு  ரஷ்ய அதிபர்  அழைப்பு விடுத்திருக்கும் நிலையில், ரஷ்ய குடிமக்கள் குடும்பம் குடும்பமாக  நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.

கடந்த ஏழு மாதங்களில் உக்ரைனுக்கு  எதிரான போரில் ரஷ்ய ராணுவம் ஆயிரக்கணக்கான வீரர்களை இழந்துள்ளது.  தற்போது உக்கரைன்  மீதான தாக்குதலை தீவிர படுத்த ரஷ்யா திட்டமிட்டுள்ளது.  இந்நிலையில் சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றில் பேசிய  ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்,  ராணுவத்தில் பணியாற்றிய பின்பு  தற்போது ரிசர்வ் பணியில் உள்ள வீரர்களை உக்ரைனுக்கு எதிரான  போரில் பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறினார். இதன்மூலம்   சுமார் 3 லட்சம் பேரை போர்க்களத்தில் இறக்க ரஷ்யா முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.   இந்நிலையில் உக்கரைன் மீதான போருக்காக ராணுவத்தில் பொதுமக்கள் 10 லட்சம் பேரை சேர்ப்பதே,  தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ராணுவ அணி திரட்டலின் உண்மையான நோக்கம் என எதிர்கட்சிகளும்,  மனித உரிமை அமைப்பும் குற்றம் சாட்டியுள்ளன.  

நாட்டை விட்டு வெளியேறும் ரஷ்ய மக்கள்

இதனால் நாடு முழுவதும் பெரும்  பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து  அச்சமடைந்த ரஷ்ய மக்கள் குடும்பம் குடும்பமாக ரஷ்யாவை விட்டு வெளியேற தொடங்கியுள்ளனர். ரஷ்யா - ஃபின்லாந்து எல்லையில்  நூற்றுக்கணக்கான கார்கள் வரிசைகட்டி  காத்திருக்கின்றன.  விமானங்கள் மூலமாகவும்   மக்கள் ரஷ்யாவை விட்டு அண்டை நாடுகளுக்கு குடிபெயர்ந்து வருகின்றனர்.  தாய்நாட்டுக்காக  உயிரை தருவது நாட்டு மக்களின் கடமை  என்றாலும்,  உக்ரைன் மீதான  ரஷ்யாவின் அர்த்தமற்ற  போரில் பங்கேற்று உயிரை இழக்க  விரும்பவில்லை என அந்நாட்டு மக்கள் கூறுவதாக ஊடகங்கள்  தெரிவிக்கின்றன.