நான் ஒரு வேற்றுகிரகவாசி....எலான் மஸ்க் ஏன் இவ்வாறு கூறினார்?

 
Elon Musk

எழுத்தாளர் டிம் அர்பன் விடுத்த கேள்விக்கு எலான் மஸ்க் தான் ஒரு வேற்றுகிரகவாசி என பதில் அளித்தது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. 

உலகின் நம்பர் ஒன் பணக்காரரான  எலான் மஸ்க், ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா உள்ளிட்ட நிறுவனங்களை நடத்தி வருகிறார். இந்நிலையில்,  கடந்த ஏப்ரல் மாதம் 44 பில்லியன் டாலருக்கு ட்விட்டரை வாங்கவிருப்பதாக எலான் மஸ்க் அறிவித்திருந்தர்.  பின்னர் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் முடிவை கைவிடப்போவதாக அறிவித்தார்.  அதன்பிறகு  ட்விட்டர் நிறுவனம் நீதிமன்றத்தை நாடியதால்,  மீண்டும் நானே  வாங்கிக் கொள்கிறேன் என்று கூறினார். இதனையடுத்து கடந்த வியாழக்கிழமை  ட்விட்டர் நிறுவனத்தை முழுவதுமாக கைப்பற்றினார்.  இந்நிலையில், ட்விட்டர் நிறுவனத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்த உடனே, முதல் வேலையாக  ட்விட்டர் சிஇஓ பராக் அகர்வாலை பணி நீக்கம் செய்தார். அவர் மட்மின்றி  ட்விட்டரில் தலைமை நிதி அதிகாரி நெட் சேகல், சட்டத்துறை தலைவர் விஜயா கட்டே, பொது ஆலோசகர் சீன் எட்கல் என உயர் அதிகாரிகள் பலரையும் அடுத்தடுத்து அதிரடியாக  பணி நீக்கம் செய்தார். மேலும் பணி நீக்கம் செய்யப்பட வேண்டிய தொழிலாளர்களின் பட்டியலை அளிக்க மேலாளர்களுக்கு எலான் மஸ்க் உத்தரவிட்டு இருந்தார். அதன்படி, டுவிட்டரின் இந்திய பணியாளர்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

Elon musk

இதனிடையே, டுவிட்டரில் எழுத்தாளர் டிம் அர்பன் பதிவிட்டிருந்த கேள்விக்கு எலான் மஸ்க் அளித்த பதில் அனைவரையும் கவர்ந்தது. "நீங்கள் அறிந்த கேளிக்கையான சதிக் கோட்பாடுகளில் உண்மையானதாக இருக்கும் என்று எதை நினைக்கிறீர்கள்?' என்று எழுத்தாளர் டிம் அர்பன் டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். இந்த கேள்விக்கு பலரும் பதில் அளித்திருந்தனர். அவரை 6.75 லட்சத்துக்கும் அதிகமானோர் டுவிட்டரில் பின் தொடருகின்றனர். இந்த கேள்விக்கு எலான் மஸ்க் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது, "நான் ஒரு வேற்றுகிரகவாசி, எனது சொந்த கிரகத்திற்கு திரும்ப முயற்சி செய்கிறேன்" என்று பதிலளித்தார்.எலான் மஸ்க்கின் இந்த பதில் அனைவரையும் கவர்ந்தது.