எல்லையில் சீனா தீவிர போர் பயிற்சி.. தைவானுக்கு விரையும் அமெரிக்காவின் பிரம்மாண்ட போர்க்கப்பல்..!

 
எல்லையில் சீனா தீவிர போர் பயிற்சி.. தைவானுக்கு விரையும் அமெரிக்க கடற்படையின் பிரம்மாண்ட போர்க்கப்பல்..!

தைவான் எல்லையை சுற்றி சீனா தீவிர  ராணுவ பயிற்சிகளில் ஈடுபட்டிருப்பதால்,  போர் பதற்றம் அதிகரித்துள்ளது.  இந்த நிலையில் அமெரிக்காவின் பிரம்மாண்ட போர் கப்பலான யுஎஸ்எஸ் ரெனால்ட் தைவானுக்கு விரைந்திருக்கிறது.  தைவான் சீனாவிடம் இருந்து பிரிந்து தனி நாடாக  செயல்பட்டு வருகிறது.  ஆனாலும் தைவான் மீது கோரப்பார்வையை வைத்திருக்கிறது சீனா. தைவானை மீண்டும் தன்னுடன் இணைத்துக்கொள்ளும்   தருணத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் சீனாவுக்கு,  தற்போது  அமெரிக்கா செய்த ஒரு செயல் மீண்டும் தைவான் மீது ஆத்திரத்தை அதிகரிக்கச் செய்துள்ளது.  

தைவான்

சீனாவின் கடும் எதிர்ப்பை மீறி,   அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி  அண்மையில் தைவான்  சென்றார்.   இதனால் மேலும் கோபமடைந்த சீனா  கடந்த 2 நாட்களாக தைவான் எல்லையை சுற்றி 6 பகுதிகளில் சீனா தீவிர ராணுவ பயிற்சிகளை மேற்கொண்டுள்ளது.  இதனால்   சீனா- தைவான் எல்லையில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. தைவானின் வடகிழக்கு மற்றும் தென்மேற்கு கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் சீனா 10க்கும் மேற்பட்ட அதிநவீன ஏவுகணைகளை வீசி சோதனை செய்திருக்கிறது.  இது உலகளவில் போர் பதற்றத்தை அதிகரிக்கச் செய்திருக்கிறது.  சீனாவின் இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

எல்லையில் சீனா தீவிர போர் பயிற்சி.. தைவானுக்கு விரையும் அமெரிக்க கடற்படையின் பிரம்மாண்ட போர்க்கப்பல்..!

 இதற்கிடையே போர் பயிற்சியின்போது சீனா பயன்படுத்திய ஏவுகணைகளில் சில,  தங்கள் நாட்டின் எல்லையில் உள்ள பொருளாதார மண்டலத்தில் விழுந்ததாக ஜப்பான் அரசு குற்றம் சாட்டியுள்ளது.  தைவான் பயணத்தை முடித்துக்கொண்டு  அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி ஜப்பான் சென்றிருக்கிறார். அவரை   வரவேற்றபின் செய்தியாளர்களிடம் பேசிய ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா, சீனாவின் இந்த தாக்குதலிக்கு  கடும் கண்டனம் தெரிவித்தார். தைவான் எல்லையில் சீனா மேற்கொண்டு வரும் தீவிர ராணுவ பயிற்சி வரும் ஞாயிறு வரை நீடிக்கும் என்று கூறப்படுவதால்,  அமெரிக்க கடற்படை விமான தாங்கி கப்பலான யுஎஸ்எஸ் ரெனால்ட் தைவான் நாட்டிற்கு  விரைந்துள்ளதாக அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது. இது மேலும் பதற்றத்தை அதிகரிக்கச் செய்திருக்கிறது.