சீனாவில் மீண்டும் காவு வாங்க தொடங்கிய கொரோனா

 
china corona china corona

சீனாவில் சுமார் ஓராண்டுக்கு பின்னர் இரண்டு பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

சீனாவின் வூஹான் நகரில் இருந்து தான் முதல் முதலில் கொரோனா வைரஸ் பரவியது. 2019 ஆண்டு அங்கு கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. உலக அளவில் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உள்ளது. இதற்கு அடுத்தப்படியாக இந்தியா, பிரேசில், பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டாலும் கூட வைரஸின் உருமாற்றத்தின் காரணமாக தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியவில்லை. டெல்டா, டெல்டா பிளஸ், ஓமைக்ரான் என அடுத்தடுத்து திரிபுகள் வந்துகொண்டே இருக்கின்றன.

china

வைரஸ் பரவிய போது சிக்கலை சந்தித்த சீனா, கடும் கட்டுப்பாடுகள் காரணமாக தொற்று பரவலை கட்டுப்படுத்தியது. உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் அங்கு குறைவான அளவே பாதிப்பு இருந்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக சீனாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 2,157 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

china

இந்நிலையில், சீனாவில் சுமார் ஓராண்டுக்கு பின்னர் இரண்டு பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இரண்டு உயிரிழப்புகளும் ஜிலின் மாகாணத்தின் வடகிழக்கு பகுதியில் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் கடந்தாண்டு ஜனவரி மாதத்திற்கு பின்னர் பதிவாகும் கொரோனா மரணங்கள் இதுவாகும். இதன் மூலம் சீனாவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 4,638 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக ஜிலின் மாகாணத்தில் பயணத்தடை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும் அங்கு தற்காலிக கொரோனா மருத்துவமனைகளும் அமைக்கப்பட்டு வருகின்றன.