உக்ரைன் பகுதிகளை தங்கள் நாட்டுடன் இணைக்க ரஷ்யா திட்டம் - அமெரிக்கா குற்றச்சாட்டு

உக்ரைனின் கிரீமியாவைப் போலவே, அந்த நாட்டில் தாங்கள் ஆக்கிரமித்துள்ள மேலும் சில பகுதிகளை தங்களுடன் இணைத்துக்கொள்ள ரஷியா திட்டமிட்டு வருவதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.
நேட்டோ அமைப்பில் இணைய முயற்சித்தது, மேற்கத்திய நாடுகளுடன் உறவு வைத்தது உள்ளிட்ட காரணங்களால் ஆத்திரமடைந்த ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்தது. உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் இறுதியில் தாக்குதைத் தொடங்கியது. போர் தொடங்கி 5 மாதங்களை நெருங்கிவிட்ட போதிலும், போர் இன்னும் முடிவுக்கு வந்ததாக தெரியவில்லை. ரஷியாவின் மும்முனை தாக்குதலுக்கு உக்ரைனின் பெரும்பாலான நகரங்கள் உருகுலைந்து போய்விட்டன. ஆனாலும் ரஷ்யாவுக்கு டஃப் கொடுக்கும் வகையில் உக்ரைன் வீரர்கள் அசராமல் எதிர்த்து போரிட்டு வருகின்றனர். இதனால் இன்னும் சில நகரங்களை பிடிக்க முடியாமல் ரஷியா திணறி வருகிறது. இந்தப்போரில் வீரர்கள், பொதுமக்கள் என இதுவரை பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். இதேபோல் பல லட்சம் மக்கள் அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில், உக்ரைனின் கிரீமியாவைப் போலவே, அந்த நாட்டில் தாங்கள் ஆக்கிரமித்துள்ள மேலும் சில பகுதிகளை தங்களுடன் இணைத்துக்கொள்ள ரஷியா திட்டமிட்டு வருவதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. இது குறித்து அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி செய்தியாளர்களிடம் கூறியதாவது : உக்ரைனின் கிரீமியா தீபகற்பம் மீது கடந்த 2014-ஆம் ஆண்டு படையெடுத்த ரஷியா, பின்னர் அந்தப் பகுதியை தங்களுடன் இணைத்துக் கொண்டது. தாங்களே உருவாக்கிகொண்ட வழிகாட்டு நெறிமுறைகளைக் காரணம் காட்டி அந்த செயலை ரஷியா நியாயப்படுத்தியது.
தற்போதும் உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷியா, அந்த நாட்டின் பகுதிகளை தங்களுடன் இணைத்துக்கொள்ளப் போவதில்லை என்று கூறி வருகிறது
. ஆனால், ரஷிய அதிபர் விளாதிமீர் புதினின் அந்த வார்த்தைகளை நம்பிவிட வேண்டாம்.
2014-ஆம் ஆண்டு கிரீமியாவை இணைத்துக் கொள்வதற்காக பயன்படுத்திய அதே வழிகாட்டு நெறிமுறைகளை அதிபர் புதின் தற்போது மீண்டும் தூசி தட்டி எடுத்துள்ளதாக எங்களுக்கு உளவுத் தகவல்கள் கிடைத்துள்ளன.தங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் உக்ரைன் பகுதிகளில் போலியாக பொதுவாக்கெடுப்பு நடத்தி, அதில் பெரும்பாலானவர்கள் தங்களுடன் இணைய விருப்பம் தெரிவித்துள்ளதாகக் கூறி அந்தப் பகுதிகளை தங்களுடன் இணைத்துக்கொள்ள ரஷியா திட்டமிட்டு வருகிறது.அதற்காக, ஆக்கிரமிப்பு பகுதிகளில் தங்களது கைப்பாவைகளை ஆட்சியாளர்களாக ரஷியா இப்போதே நிறுவியுள்ளது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.