பாகிஸ்தான் சிறையிலிருந்து 198 இந்திய மீனவர்கள் விடுதலை..

 
பாகிஸ்தான் சிறையிலிருந்து 198 இந்திய மீனவர்கள் விடுதலை..

சர்வதேச கடல் எல்லையை தாண்டியதாக பிடிபட்ட 198 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் அரசு விடுவித்துள்ளது.  

இந்திய கடல் எல்லையை தாண்டி சட்ட விரோதமாக சர்வதேச எல்லையைக் கடக்கும் மீனவர்கள்  அந்தந்த நாடுகளின் கடற்படையால் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.  அந்தவகையில் அரபிக்கடலில்  எல்லை தாண்டி  பாகிஸ்தானின் கடற்பரப்பில் மீன் பிடித்ததாக இந்திய மீனவர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவ்வாறு தற்போது வரை 651 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டு அந்நாட்டின் கராச்சி சிறையில் அடைக்கப்பட்டு தண்டனை பெற்று வருகின்றனர்.  இதில் 631 மீனவர்களின் தண்டனை காலம் முடிந்து நாடு திரும்புவதற்காக காத்திருப்பதாக கூறப்படுகிறது.  

பாகிஸ்தான்

இதற்கிடையே, கடந்த சில தினங்களுக்கு முன் கராச்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்த  இந்திய மீனவர் ஒருவர் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். இதையடுத்து,  12-ம் தேதி 198 இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட உள்ளதாக பாகிஸ்தான் அரசு அறிவித்திருந்தது.  அதன்படியே  கராச்சி சிறையில் இருந்து 198 இந்திய மீனவர்கள் நேற்று இரவு  விடுதலை செய்யப்பட்டனர்.   முதலில் லாகூருக்கு அனுப்பப்பட்ட அவர்கள் ,  அதன்பின் வாகா எல்லையில் உள்ள இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். இதனையடுத்து அவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்புகின்றனர்.