காட்டுப்பன்றி வேட்டையின்போது தொழிலாளி சுட்டுக்கொலை – ஒருவர் கைது

 

காட்டுப்பன்றி வேட்டையின்போது  தொழிலாளி சுட்டுக்கொலை – ஒருவர் கைது

கிருஷ்ணகிரி

அஞ்செட்டி அருகே பன்றி வேட்டையின் போது தவறுதலாக துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் தொழிலாளி உயிரிழந்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகேயுள்ள தொட்டமஞ்சி ஊராட்சி வன்னியபுரம் பகுதியை சேர்ந்தவர் பசப்பா(40). கூலி தொழிலாளி. இதேபோல் தொட்டமஞ்சி ஊராட்சிக்கு உட்பட்ட சிக்கமஞ்சு பகுதியை சேர்ந்தவர் நாகராஜ்(27). இவர்கள் இருவரும் வியாழன் அன்று நள்ளிரவில் சிக்கமஞ்சு வனப்பகுதிக்கு காட்டுப்பன்றி வேட்டையாட, நாட்டுத்துப் பாக்கிகளுடன் சென்றனர்.

காட்டுப்பன்றி வேட்டையின்போது  தொழிலாளி சுட்டுக்கொலை – ஒருவர் கைது

வனப்பகுதியில் இருவரும் தனித்தனியே பிரிந்து சென்று தேடியபோது, புதரில் இருந்து சத்தம் வந்ததால், அதனை நோக்கி நாகராஜ் துப்பாக்கியால் சுட்டார். அப்போது, புதரின் மறைவில் இருந்த பசப்பா மீது எதிர்பாராத விதமாக குண்டு பாய்ந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த நாகராஜ், அஞ்செட்டி காவல் நிலையத்தில் தகவலை தெரிவித்து சரணடைந்தார்.

இதனை அடுத்து, தேன்கனிகோட்டை டிஎஸ்பி சங்கீதா மற்றும் அஞ்செட்டி வனச்சரகர் தலைமையில் போலீசார் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பசப்பாவின் சடலத்தை மீட்டனர். தொடர்ந்து, அதனை பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிய போலீசார், சம்பவம் குறித்து நாகராஜிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.