கொரோனாவைத் தடுக்க எந்த மாஸ்க் நல்ல மாஸ்க்?

 

கொரோனாவைத் தடுக்க எந்த மாஸ்க் நல்ல மாஸ்க்?

கொரோனா வைரஸ் தொடர்பாக உலகம் முழுக்க ஆய்வுகள் நடந்து வருகின்றன. தினம் தினம் கொரோனா வைரஸ் பற்றி புதுப்புது தகவல் வெளியாகிக் கொண்டே இருக்கிறது.

கொரோனா இவ்வளவு வேகத்தில் பரவும், இன்ன மாதிரியான புதுவித அறிகுறிகளை வெளிப்படுத்தும் என்று நொடிக்கு ஒரு அப்டேட் வந்துகொண்டே இருக்கிறது. கொரோனா பரவலைத் தடுக்க என்ன செய்யலாம் என்றும் ஆய்வுகள் நடந்து வருகின்றன. அதன் படி மூன்று லேயர் மாஸ்க் அணிந்தால் கொரோனா பரவல் தடுக்கலாம் என்று கூறப்பட்டது. இப்போது புதிதாக ஐந்து லேயர் மாஸ்க்கை பரிந்துரைக்க ஆரம்பித்துள்ளனர் ஆய்வாளர்கள்.

கொரோனாவைத் தடுக்க எந்த மாஸ்க் நல்ல மாஸ்க்?

என்ன மாதிரியான மாஸ்க் அணிவது கொரோனா பரவலைத் தடுக்க உதவுகிறது என்று புவனேஷ்வர் ஐஐடி ஆய்வாளர்கள் ஆராய்ச்சி நடத்தினர். அறுவைசிகிச்சையின் போது பயன்படுத்தப்படும் மாஸ்க், மூன்று லேயர் மாஸ்க், ஐந்து லேயர் மாஸ்க் என பலவகையான மாஸ்க்கை வைத்து ஆய்வுகள் நடத்தப்பட்டன.

நாம் சுவாசிக்கும்போத மூச்சுக் காற்றின் வழியாக சிறிய நீர்த்துளிகள் ஐந்து விநாடிகளில் நான்கு அடி தூரம் வரை பயணிக்கும் திறன் கொண்டதாக உள்ளது. எனவே, நாம் மற்றவர்களுடன் பேசும்போது சர்வ சாதாரணமாக கொரோனா கிருமி இந்த நீர்த்துளிகள் மூலமாக மற்றவர்களுக்கு பரவுவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே, இதை எதிர்கொள்ள எந்த மாஸ்க் சரியானதாக இருக்கும் என்று ஆய்வு நடத்தப்பட்டது.

அந்த வகையில் அறுவைசிகிச்சையின் போது பயன்படுத்தப்படும் மாஸ்க்குகள் கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் இல்லை என்கின்றனர். என்95 மாஸ்க்குகள் நீர்த்துளிகள் கசிவதைத் தடுக்கின்றன. ஆனால், அவற்றால் முற்றிலுமாக தடுக்க முடிவது இல்லை. மூக்குக்கும் முகமூடிக்கும் இடைப்பட்ட இடைவெளி வழியாக நீர்த்துளி கசிவது நடக்கிறது என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அதே நேரத்தில் ஐந்து லேயர் மாஸ்க் வழியாக நீர்த்துளி வெளியேறுவது மிகக் கடுமையாக தடுக்கப்படுகிறது என்று அவர்கள் தெரிவிக்கின்றனர். எனவே, ஐந்து லேயர் மாஸ்க் அணிவது பாதுகாப்பானது என்கின்றனர். இது குறித்து ஐஐடி புவனேஷ்வர் ஆய்வாளர் பேராசிரியர் ஆர்.வி.ராஜ்குமார் கூறுகையில், “சுவாசம் எந்த அளவுக்கு கொரோனா பரவலுக்கு காரணமாக இருக்கிறது என்று தொடர்ந்து ஆய்வுகள் நடந்து வருகின்றன. பொதுவாக அணியக்கூடிய சாதாரண முகமூடிகளால் கொரோனா பரவலைத் தடுக்க முடியவில்லை. அதன் வழியாக நீர்த்துளிகள் வெளியேறிக்கொண்டுதான் இருக்கின்றன. இந்த நீர்த்துளிகள் மூலம் கொரோனா பரவும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. ஐந்து லேயர் மாஸ்க் மிகவும் பாதுகாப்பானதாக மிகக் குறைந்த அளவில் நீர்த்துளிகள் கசியும் வகையில் உள்ளது” என்றார்.