சாம்பல் புதன்: மனம் திருந்தி அன்பு செய்ய அழைக்கும் தவக் காலம்!

 

சாம்பல் புதன்: மனம் திருந்தி அன்பு செய்ய அழைக்கும் தவக் காலம்!

கிறிஸ்தவர்கள் இன்று சாம்பல் புதனுடன் தவக் காலத்தைத் தொடங்கியுள்ளனர். இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பைக் கொண்டாட, தங்களைத் தயாரிக்கும் வகையில் 40 நாள் நோன்புக் காலம் அனுசரிக்கப்படுகிறது. இதன் முடிவில், மார்ச் 28ம் தேதி குருத்தோலை ஞாயிறு, ஏப்ரல் 2ம் தேதி புனித வெள்ளி, இறுதியில் ஏப்ரல் 4ம் தேதி ஈஸ்டர் எனப்படும் உயிர்ப்பு ஞாயிற்றைக் கொண்டாடப்பட உள்ளது.

சாம்பல் புதன்: மனம் திருந்தி அன்பு செய்ய அழைக்கும் தவக் காலம்!

தவக் காலத்தின் முதல் நாளில் கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி நடத்தப்படும். அதில், கிறிஸ்தவர்கள் நெற்றில் “மனிதன் மண்ணாக இருக்கிறான், மண்ணுக்குத் திரும்புவான்” என்பதன் அடையாளமாக சாம்பல் பூசுதல் நடைபெறும். இந்த 40 நாட்களில் முடிந்தவர்கள் ஒரு வேலை நோன்பு இருந்து, அசைவ உணவுகளைத் தவிர்த்து, ஏழைகளுக்கு உதவ அழைக்கப்படுகின்றனர். முடியாதவர்கள் விபூதி புதன், புனித வெள்ளி அன்று அசைவ உணவு தவிர்த்து, ஒருவேளை நோன்பு இருக்க அழைக்கப்படுகின்றனர்.

ஏன் 40 நாட்கள்?

பைபிளில் 40 என்பது பல இடங்களில் வருகிறது. மோயிசன் சீனாய் மலையில் 10 கட்டளை வாங்குவதற்கு முன்பு 40 நாட்கள் நோன்பு இருக்கிறார். எலியா ஒலிவ மலைக்கு செல்வதற்கு முன்பு 40 நாட்கள் நோன்பு, இயேசு தன் பணி வாழ்வைத் தொடங்குவதற்கு முன்பு 40 நாட்கள் நோன்பு இருக்கிறார். இப்படி மிகப்பெரிய பணிக்கு ஆயத்தமாக நோன்பிருக்கின்றனர். இயேசுவின் உயிர்ப்பு என்ற மிகப்பெரிய விஷயத்தை எதிர்கொள்ள, இயேசு கற்பித்த அன்பை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்ல இந்த 40 நாட்கள் பயன்படுகிறது.

இஸ்ரேல் மக்கள் 40 ஆண்டுகள் பாலைவனத்தில் நடந்து கானான் தேசத்தை அடைந்தார்கள். நோவா காலத்தில் 40 நாட்கள் மழை பெய்கிறது. சவுல், தாவீது, சாலமோன் அரசர்கள் 40 ஆண்டுகள் ஆட்சி செய்தனர். கோலியாத் இஸ்ரேல் மக்களுக்கு எதிராக போரிட வந்த போது 40 நாட்கள் இஸ்ராயல் மக்களைப் பார்த்து கேலி செய்கிறான். அதன் பிறகு தாவீது அவரை வீழ்த்துகிறான்.

புதிய ஏற்பாட்டில் இயேசு 40 நாட்கள் நோன்பிருப்பதையும் உயிர்த்த பிறகு 40 நாள் கழித்து விண்ணேற்றம் அடைவதையும் காணலாம். 40 என்பது மிக முக்கியமான எண்ணாகப் பார்க்கப்படுகிறது. எனவே, தங்களைத் தாங்களே அன்பு செய்ய, தங்களை நேசிப்பது போல பிறரை நேசிப்பது எப்படி என்று உணர்ந்துகொள்ள இந்த 40 நாட்கள் தவ முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

இந்த 40 நாட்களில், 1. தர்மம் செய்ய, 2. இறை வேண்டலில் ஈடுபட, 3. நோன்பிருக்க கிறிஸ்தவர்கள் அழைக்கப்படுகின்றனர். அதாவது, இந்த நாட்களில் அடுத்தவர் மீது உள்ள அன்பை தர்மம் செய்வதன் மூலம் வெளிப்படுத்த வேண்டும். கடவுளின் அன்பைப் பெற இறை வேண்டல் செய்ய வேண்டும். நம் உடலை அன்பு செய்ய நோன்பிருக்க வேண்டும்.

நோன்பிருக்கும் போது அது யாருக்கும் தெரியாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று இயேசு சொல்கிறார். நோன்பிருக்கிறேன் என்பதற்காக பழைய ஆடையை உடுத்துவது, முகத்தை வாட்டமாக வைத்துக்கொள்வது போன்றவற்றைச் செய்யக் கூடாது. வழக்கம் போல எந்த வித்தியாசத்தையும் வெளிப்படுத்தாமல் நோன்பிருக்க வேண்டும்.

இத்தனை ஆண்டுகள் தவக்காலம் எப்படி கடைப்பிடித்தோம் என்பது பற்றிய கவலை இனி தேவையில்லை. இப்போதாவது இந்த ஆண்டாவது, மனம் திரும்பி அழுது புலம்பி கடவுளிடம் திரும்ப முயலலாம்!