உயிர்ப்பு பெருவிழா: இயேசு உயிர்த்திருக்காவிட்டால்?

 

உயிர்ப்பு பெருவிழா: இயேசு உயிர்த்திருக்காவிட்டால்?

உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் இன்று இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பு பெருவிழாவைக் கொண்டாடுகின்றனர். இயேசு சிலுவையில் அறையப்பட்டு, தன்னுடைய உயிரை கடவுளிடம் ஒப்படைத்தார். தாமாகவே அதை வழங்கினார். இறந்த சிறுமி, லாசரை உயிரோடு எழுப்பும் ஆற்றல் கொண்ட இயேசு, மனிதர்களை பாவத்தின் பிடியில் இருந்து மீட்க தாமாக சிலுவை சாவை ஏற்க முன்வந்தார். ஏற்கனவே தான் மூன்றாம் நாள் உயிர்த்தெழுவேன் என்று தன் சீடர்களுக்கு கூறியது போல வாரத்தின் முதல் நாள் (ஞாயிற்றுக்கிழமை) இயேசு உயிர்த்தெழுந்தார்.

உயிர்ப்பு பெருவிழா: இயேசு உயிர்த்திருக்காவிட்டால்?

மிகவும் ரகசியமாக இந்த நிகழ்வு நடைபெறவில்லை. நள்ளிரவில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது என்று (மத்தேயு 28:2) விவிலியம் சொல்கிறது. உயிர்த்த பிறகு சீடர்கள் மற்றும் ஏராளமானவர்களுக்கு இயேசு காட்சி கொடுத்தார். கிறிஸ்தவர்களை சித்ரவதை செய்து வந்த சவுலையும் ஆட்கொண்டார். இயேசுவின் உயிர்ப்பைப் பற்றி சவுலாக இருந்து பவுலாக மாறிய பின், “கிறிஸ்து உயிர்த்தெழவில்லையென்றால், எங்கள் தூதுரை பொருளற்றதே, உங்கள் விசுவாசமும் பொருளற்றதே” (1 கொரிந்தியர் 15:14) என்று கூறுகிறார்.

கிறிஸ்தவத்தின் அடிப்படையே இயேசுவின் உயிர்த்தெழுதல்தான். அவர் உயிர்த்தெழாதிருந்தால் கிறிஸ்தவம் இல்லை. கிறிஸ்தவர்களும் இல்லை. இயேசு பற்றி சொல்லப்படும் அனைத்தும் பொய்யாக பார்க்ப்பட்டிருக்கும். வரலாற்றில் ஒரு நல்ல மனிதர் வாழ்ந்தார், இறந்தார் என்று இயேசுவும் வரலாற்று நாயகனாக பார்க்கப்பட்டிருப்பார். ஆனால் அவர் உயிர்த்தெழுந்தார். அதனால்தான் மற்ற எல்லா திருவிழாக்களைக் காட்டிலும் மிக முக்கியமான விழாவாக உயிர்ப்பு ஞாயிறை கிறிஸ்தவர்கள் கொண்டாடுகின்றனர்.

இயேசுவை யூதாஸ் காட்டிக்கொடுத்த இரவில் சேவல் இரண்டு முறை கூவுவதற்குள் மும்முறை என்னை மறுதலிப்பாய் என்று புனித பேதுருவிடம் இயேசு சொல்கிறார். அப்படிச் செய்ய மாட்டேன் என்று கூறிய பேதுரு, இயேசு கைது செய்யப்பட்ட பிறகு இயேசு யார் என்று தெரியாது என்று மறுதலிக்கவும் இயேசுவை சபிக்கவும் செய்தார் என்று விவிலியம் கூறுகிறது.

அப்படிப்பட்ட பேதுரு இயேசு உயிர்த்து, விண்ணேற்றம் அடைந்த பிறகு மிகவும் தைரியமாக யூதர்களின் ஆலயத்துக்கு வந்து பிறவியிலிருந்தே ஊனமாக இருந்த பிச்சை எடுத்துக்கொண்டிருந்த ஒருவரைக் குணமாக்குகிறார். அந்த பிச்சைக்காரரைப் பார்த்து பேதுரு, “வெள்ளியோ, பொன்னோ என்னிடத்தில் இல்லை. என்னிடம் உள்ளதை உனக்குக் கொடுக்கிறேன். நாசரேயராகிய இயேசு கிறிஸ்துவின் பெயரால் எழுந்து நட” என்று கூறுகிறார். அந்த ஊனமுற்ற நபர் ஊனம் மறைந்து துள்ளி நடந்தான்.

இயேசுவைப் பற்றி பேதுரு பிரசங்கம் செய்வதைக் கண்டு கோபம் கொண்டு அவரை யூத மத குருக்கள் சிறைபிடித்தனர். அவரிடம் எந்த வல்லமையால், யார் செயரால் இதை செய்தீர்கள் என்று அவர்கள் கேட்க அதற்கு பேதுருவோ, “இயேசு கிறிஸ்துவின் பெயரால்தான். இந்த இயேசுவைத்தான் நீங்கள் சிலுவையில் அறைந்தீர்கள். கடவுளோ அவரை இறந்தோரிடமிருந்து உயிர்ப்பித்தார்” என்கிறார். பேதுருவை கொலை செய்வது ஒன்றும் யூத பெரியவர்களுக்கு பெரிய விஷயமே இல்லை. அதே போல் இயேசுவை கொலை செய்த யூத பெரியவர்கள் என்ற அச்சம் இப்போது பேதுருவுக்கும் இல்லை. இயேசுவை கொலை செய்தவர்கள் முன்பாகவே இயேசுவின் பெயரை அறிக்கையிடுகிறார் பேதுரு. அவரை மாற்றியது இயேசுவின் உயிர்ப்புதான்!

இயேசு உயிர்த்தார் என்பதால்தான் அவருடைய சீடர்கள் உலகம் முழுவதும் சென்று இயேசு அறிவித்த நற்செய்தியை பரப்பினர். இதற்காக அவர்களுக்கு பொன்னும் பொருளும் கிடைக்கவில்லை. அவர்களுக்கு கிடைத்தது எல்லாம் தண்டனையும் மரணமும்தான். இயேசுவின் அன்பு சீடர் என்று அழைக்கப்பட்ட யோவனை (அருளப்பர்) தவிர்த்து அனைத்து திருத்தூதர்களும் மிகக் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டனர். இந்தியாவுக்கு கிறிஸ்தவத்தைப் பரப்ப வந்த புனித தாமஸ் ஈட்டியால் குத்தி கொல்லப்பட்டார். புனித பேதுரு தலைகீழாக சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்பட்டார். இயேசுவுக்காக உயிரைக் கொடுக்கும் அளவுக்கு முன்வந்தது ஏன் என்று சிந்தித்தால், உயிர்த்த இயேசுவை அவர்கள் நேரில் பார்த்தனர், அவரைத் தொட்டனர், அவருடன் அப்பத்தைப் பிட்டு உட்கொண்டனர், அவரது உத்தரவு படி உலகம் முழுக்க நற்செய்தியை அறிவித்தனர்!

விண்ணகம் சென்ற இயேசு, இன்றும் உயிரோடு இருக்கிறார். நம்மைவிட்டு அகலாமல் எல்லா நேரங்களிலும் நம்மோடு இருக்கிறார். இந்த கொரோனா காலத்திலும் அஞ்சாதே நான் உன்னோடு இருக்கிறேன் என்று சொல்கிறார். எனவே, அவரின் அரவணைப்பில் அடைக்கலம் புகுவோம். உயிர்த்த இயேசு வழங்கும் அன்பு, அமைதி, சமாதானம் நம் எல்லோர் உள்ளங்களையும் நிறைப்பதாக!