சென்னை அப்பார்ட்மெண்டில் என்ன நடந்தது?- மலேசிய இளைஞரின் மரணத்தில் விலகாத மர்ம முடிச்சுக்கள்

 

சென்னை அப்பார்ட்மெண்டில் என்ன நடந்தது?- மலேசிய இளைஞரின் மரணத்தில் விலகாத மர்ம முடிச்சுக்கள்

சென்னை பொழிச்சலூரில் பூட்டிய வீட்டுக்குள் நிர்வாணமாக அழுகிய நிலையில் கிடந்த மலேசிய இளைஞரின் மரணத்தில் மர்மங்கள் தொடருவதால் அதிர்ச்சியில் அடுக்குமாடியில் குடியிருப்பவர்கள் உறைந்துள்ளனர்.

ஐடி நிறுவன ஊழியர்கள்

சென்னை பல்லாவரத்தை அடுத்த பொழிச்சலூர், வெங்கடேஸ்வராநகர் 2-வது குறுக்குத் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பூட்டிய வீட்டுக்குள் இளைஞர் நிர்வாணமாக அழுகிய நிலையில் இறந்துகிடந்தார். வீட்டின் உரிமையாளர் குமார் கொடுத்த புகாரின்பேரில் சங்கர் நகர் போலீஸார் விசாரித்த போது அந்த இளைஞரின் பெயர் பழனிமுருகன் (32) என்றும் திருச்சி மண்ணச்சநல்லூரைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது. பழனிமுருகனை கொலை செய்தது யாரென்று போலீஸார் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

சென்னை அப்பார்ட்மெண்டில் என்ன நடந்தது?- மலேசிய இளைஞரின் மரணத்தில் விலகாத மர்ம முடிச்சுக்கள்

குமாரின் வீட்டில் சிவகங்கையைச் சேர்ந்த சேதுபதி அவரின் சகோதரர், வெங்கடேஷ் ஆகியோர் கடந்த 3 ஆண்டுகளாக குடியிருந்துவந்தனர். இவர்களின் உறவினர் மதுரையைச் சேர்ந்த மதன். இவர் தனியார் நிறுவன ஊழியர். மலேசியாவில் வேலைப்பார்த்த மதன், சென்னைக்கு வேலைத் தேடிவந்தார். சேதுபதி, வெங்கடேஷ் வீட்டில் தங்கினார். மதன், தங்கியிருந்த தகவல் வீட்டின் உரிமையாளருக்கு தெரியாது. சேதுபதியும் வெங்கடேஷிம் ஐடி நிறுவனத்தில் பணியாற்றியதால் சரியாக வாடகையை கொடுத்துவந்தனர்.

மலேசியாவில் தொடங்கிய நட்பு

ஊரடங்கையொட்டி சொந்த ஊருக்கு சேதுபதியும் வெங்கடேஷிம் சென்றுவிட்டனர். வீட்டில் தனியாக மதன் இருந்தார். திருச்சி, மண்ணச்சநல்லூரைச் சேர்ந்த பழனிமுருகனின் அம்மா, சகோதரி ஆகியோர் மலேசியாவில் உள்ளனர். அங்கு வேலைப்பார்த்துக் கொண்டிருந்த பழனிமுருகன், திருச்சியிலிருக்கும் அப்பா, சகோதரனை சந்திக்க ஊர் திரும்பியுள்ளார். ஊரடங்கால் மலேசியாவுக்கு அவரால் செல்ல முடியவில்லை. சென்னையில் தங்கியிருந்த பழனிமுருகனும் மதனும் மலேசியாவில் ஒரே நிறுவனத்தில் வேலைப்பார்த்தவர்கள். அந்த நட்பு காரணமாக மதன் தங்கியிருந்த வீட்டுக்கு பழனிமுருகன் வந்துள்ளார்.

சென்னை அப்பார்ட்மெண்டில் என்ன நடந்தது?- மலேசிய இளைஞரின் மரணத்தில் விலகாத மர்ம முடிச்சுக்கள்

பழனிமுருகன் வீட்டில் தங்கியிருக்கும் தகவல் சேதுபதிக்கும் வெங்கடேஷிக்கும் தெரியாது. கடந்த மாதம் வீட்டை பூட்டி விட்டு சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு புறப்பட்டார் மதன். மதுரைக்குச் செல்லும் வழியில் சேதுபதியையும் வெங்கடேஷையும் சந்தித்து வீட்டு சாவியை கொடுத்துவிட்டு சென்றார். அதன்பிறகுதான் பூட்டிய வீட்டுக்குள் பழனிமுருகன் உயிரிழந்து சில நாள்களானதால் துர்நாற்றம் வீசியது. அப்போதுகூட அந்த அடுக்குமாடி குடியிருப்பவர்கள் கழிவுநீர் அடைப்பே துர்நாற்றத்துக்கு காரணம் எனக்கருதி சுத்தம் செய்தனர். அதன்பிறகும் துர்நாற்றம் வீசியதால்தான் சேதுபதி, வெங்கடேஷ் தங்கியிருந்த வீட்டுக்குள் இருந்து வருவதை கண்டறிந்தனர்.

சென்னை அப்பார்ட்மெண்டில் என்ன நடந்தது?- மலேசிய இளைஞரின் மரணத்தில் விலகாத மர்ம முடிச்சுக்கள்

கூரியரில் வந்த வீட்டுச் சாவி

மயிலாப்பூரில் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர் குமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரும் அங்கு வந்தார். ஆனால் அவரிடம் சாவி இல்லை. அதனால் சேதுபதி, வெங்கடேஷை செல்போனில் தொடர்பு கொண்டு பேசி சாவியை கொண்டுவரும்படி கூறினார். ஊரடங்கால் சென்னைக்கு வரமுடியாது எனக்கூறிய சேதுபதி, வெங்கடேஷ் கூரியர் மூலம் சிவகங்கையிலிருந்து சென்னைக்கு சாவியை அனுப்பிவைத்தனர். சாவிக்கு கைக்கு வந்தப்பிறகுதான் பழனிமுருகன் இறந்துகிடந்தது தெரியவந்தது.

சங்கர்நகர் போலீஸார் சேதுபதியையும் வெங்கடேஷையும் போனில் விசாரித்தனர். பின்னர் இருவரையும் சென்னைக்கு வரும்படி அழைத்தனர். ஊரடங்கு காரணமாக சென்னையிலிருந்த இ-பாஸ் அனுமதியோடு ஒரு வாகனம் சிவகங்கைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர். அந்த வாகனத்தில் சென்னை வந்த சேதுபதி, வெங்கடேஷிடம் உங்களுடன் தங்கியிருந்த பழனிமுருகன் எப்படி இறந்தார் என்று போலீஸார் கேட்டபோது இருவரும் பழனிமுருகனா, யார் அவர் என்று கேள்விகேட்டுள்ளனர். உடனே போலீஸார் தங்கள் பாணியில் இருவரிடம் விசாரித்தபோது உண்மையிலேயே எங்களுக்கு பழனிமுருகன் யாரென்றே தெரியாது. எங்களுடன் தங்கியிருந்த மதன்தான் கடைசியாக வீட்டை பூட்டி சாவியை எங்களிடம் கொடுத்தார் என்று கூறினர்.

சென்னை அப்பார்ட்மெண்டில் என்ன நடந்தது?- மலேசிய இளைஞரின் மரணத்தில் விலகாத மர்ம முடிச்சுக்கள்
இரட்டை குழந்தைகள்

இதையடுத்து போலீஸாரின் சந்தேகப்பார்வை மதனின் மீது விழந்தது. மதனின் செல்போனில் பேசிய போலீஸார் பழனிமுருகன் குறித்து விசாரித்தனர். அப்போது பவ்வியமாக பேசிய மதன், சார்…. பழனிமுருகன் குறித்த தகவல்களை உங்களிடம் நேரில் வந்து சொல்கிறேன். எனக்கு இப்போதுதான் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது என்று கூறியுள்ளார். உடனே போலீஸாரும் மதனின் வருகைக்காக காத்திருந்தனர். ஆனால் நாள்கள் கடந்தன. அவர் விசாரணைக்கு வரவில்லை. அதனால் மதனை போலீஸார் மீண்டும் தொடர்பு கொண்டனர். அப்போது அவரின் செல்போன் நம்பர் சுவிட்ச் ஆப் என வந்தது. அதனால் மதனின் மீதான சந்தேகம் போலீஸாருக்கு வலுத்தது.

இந்தச் சமயத்தில் உயிரிழந்த பழனிமுருகனின் உறவினர், திருச்சியிலிருந்து சென்னை வந்தனர். பிரேத பரிசோதனைக்குப்பிறகு சென்னையிலேயே அவரின் இறுதிச் சடங்கை முடித்த உறவினர்கள் புறப்பட்டுச் சென்றுவிட்டனர். பழனிமுருகனின் மரணத்தில் மறைந்துள்ள மர்மத்தை விசாரிக்க அவரின் உறவினர்தரப்பிலிருந்து எந்தவித முயற்சியும் எடுக்கப்படவில்லை. அதனால் சங்கர்நகர் போலீஸார் பழனிமுருகனின் ஃபைலை தற்கொலை என மூடுவதற்கான அனைத்து வேலைகளையும் ஈடுபட்டுவருகின்றனர்.

மர்ம முடிச்சுக்கள்

சிவகங்கையிலிருந்து இ-பாஸ் வாங்கிக் கொடுத்து விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட சேதுபதி, வெங்கடேஷ் ஆகியோர் சென்னையிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஆனால் பழனிமுருகனை வீட்டுக்குள் வைத்து பூட்டிவிட்டு சாவியை சேதுபதியிடமும் வெங்கடேஷிடமும் கொடுத்துவிட்டு சென்ற மதனைப் பிடிக்க போலீஸார் எந்தவித முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. பழனிமுருகனின் மரணத்தில் உள்ள மர்ம முடிச்சுக்கள் அவிழ வேண்டும் என்றால் மதன் வாயைத் திறக்க வேண்டும் என்று போலீஸார் சொல்லிவருகின்றனர்.

சென்னை அப்பார்ட்மெண்டில் என்ன நடந்தது?- மலேசிய இளைஞரின் மரணத்தில் விலகாத மர்ம முடிச்சுக்கள்

பழனிமுருகன் குறித்து போலீஸார் நடத்திய விசாரணையில் இன்னொரு அதிர்ச்சி தகவலும் கிடைத்துள்ளது. பழனிமுருகனின் குடும்பத்தில் அவரின் அப்பாவும் அம்மாவும் தனித்தனியாக குடியிருந்துவருகின்றனர். அதனால் மலேசியாவில் தங்கியிருந்த காலக்கட்டத்தில் பழனிமுருகன் சிலருக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணத்தை ஏமாற்றியதாக குற்றச்சாட்டு உள்ளது. மேலும் மதனும் பழனிமுருகனும் ஒரே நிறுவனத்தில் மலேசியாவில் வேலைப்பார்த்துவந்துள்ளனர். அப்போது இருவருக்கும் ஏற்பட்ட நட்பு சென்னையிலும் தொடர்ந்துள்ளது. இதனால் பழனிமுருகன் குறித்த முழுவிவரங்கள் மதனுக்கு கண்டிப்பாக தெரிந்திருக்கும்.

தற்கொலைக்கு வாய்ப்பில்லை

சேதுபதியும் வெங்கடேஷிம் சென்னையிலிருந்து சிவகங்கைக்குச் சென்றபிறகுதான் பழனிமுருகன் மதனுடன் தங்கியுள்ளார். மேலும் அவர் நிர்வாணமாக உயிரிழந்துள்ளார். அதுவும் போலீஸாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரேத பரிசோதனை ரிப்போர்ட்டில் பழனிமுருகன் தற்கொலை செய்து கொண்டதற்கான எந்த அறிகுறிகளும் இல்லை என்று டாக்டர்கள் போலீஸாரிடம் கூறியுள்ளனர். அப்படியென்றால் பழனிமுருகன் உயிரிழந்தது எப்படி என்ற கேள்விக்கு மட்டும் போலீஸாருக்கு இன்னும் விடைத் தெரியவில்லை. பழனிமுருகனின் மரணம் தொடர்பாக அவரின் குடும்பத்தினர் தரப்பிலிருந்தும் எந்தவித புகாரும் காவல் நிலையத்தில் கொடுக்கப்படவில்லை என்பது இன்னொரு அதிர்ச்சியாக உள்ளது.

 

மதன் எங்கு இருக்கிறார். அவருக்கும் பழனிமுருகனின் கொலைக்கும் என்ன தொடர்பு உள்ளது போன்ற கேள்விகளுக்கு பதில் கிடைத்தால் மட்டுமே வழக்கு அடுத்தக்கட்டத்துக்கு நகரும். ஆனால் போலீஸாரோ, ஊரடங்கு பணியால் மதனைப் பிடிக்கவில்லை என்று கூறிவருகின்றனர். மதன் சிக்கினால் பழனிமுருகனின் மரணத்தில் உள்ள மர்மமுடிச்சுக்கள் அவிழும் என எதிர்பார்க்கப்படுகிறது!

– எஸ்.செல்வம்