கர்ப்பகால உடல் எடை அதிகரித்தல் பிரச்னை… செய்ய வேண்டியதும் தவிர்க்க வேண்டியதும்!

 

கர்ப்பகால உடல் எடை அதிகரித்தல் பிரச்னை… செய்ய வேண்டியதும் தவிர்க்க வேண்டியதும்!

கர்ப்ப காலத்தில் உடல் எடை அதிகரிப்பது என்பது தவிர்க்க முடியாததுதான். ஆனால், அது சில பெண்களுக்கு கர்ப்ப கால சர்க்கரை நோய் உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்திவிடலாம். கர்ப்ப காலத்தில் தன்னுடைய மற்றும் வயிற்றில் வளரும் குட்டி சிசுவின் ஆரோக்கியத்தைக் காக்க வேண்டியது தாயின் கடமை.

கர்ப்ப காலத்தில் உடல் எடை அதிகரிக்காமல் இருக்க பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றலாம்…

கர்ப்பகால உடல் எடை அதிகரித்தல் பிரச்னை… செய்ய வேண்டியதும் தவிர்க்க வேண்டியதும்!

காலையில் எழுந்ததும் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீர் அருந்தலாம். வெந்நீர் அல்லது மிகவும் குளிர்ந்த நீர் வேண்டாம்.

காலை 8 மணி அளவில் இட்லி போன்ற எளிதில் செரிமானம் ஆகும் காலை உணவை எடுத்துக்கொள்ளலாம். இதனுடன் போதுமான அளவு தண்ணீர் அருந்த வேண்டும். காபி, டீ போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.

காலை 10.30 – 11 மணி அளவில் பாலில் மருத்துவர் பரிந்துரைத்த சத்து பவுடரை எடுத்துக்கொள்ளலாம். அதன் பிறகு 30 நிமிடங்களுக்கு வீட்டுக்குள்ளேயே காலார நடக்க வேண்டும். காய்கறி, பழ சாலட் எடுத்துக்கொள்ளலாம்.

மதியம் 2 மணிக்குள்ளாக மதிய உணவை முடித்துவிட வேண்டும். சாப்பிட்டு அரை மணி நேரம் கழித்து அரை மணி நேரம் தூங்க வேண்டும். இது குழந்தைக்கான ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும்.

மாலையில் ஆப்பிள், வேக வைத்த கொண்டைக் கடலை போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம். இரவு 7 முதல் 7.30க்குள் இரவு உணவை முடித்துவிட வேண்டும். அதன் பிறகு பசித்தால் வாழைப் பழம் போன்ற பழங்களைச் சாப்பிடலாம்.

எந்த சூழலிலும் சர்க்கரையை எடுத்துக்கொள்ள வேண்டாம். முடிந்த வரை காபி, டீ-யைத் தவிர்த்துவிட வேண்டும். பழங்களை முடிந்த வரை கடித்து சாப்பிடுவது நல்லது. ஜூஸாக அருந்தும் போது அது ரத்தத்தில் சர்க்கரை அளவை வேகமாக அதிகரிக்கச் செய்துவிடும். பழங்களை கடித்து சாப்பிட முடியாதவர்கள் சர்க்கரை சேர்க்காமல் ஜூஸாக அருந்தலாம்.

தினமும் 30 நிமிடமாவது வீட்டுக்குள் நடைப்பயிற்சி செய்வது நல்லது. எப்போதும் ஆரோக்கியமான, வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவையே எடுத்துக்கொள்ள வேண்டும்.

உடல் பருமன் அதிகரிப்பது, உடல் உழைப்பு குறைவது கர்ப்ப கால சர்க்கரை நோய்க்கு முக்கிய காரணம். எனவே. நாள் முழுக்க சோர்ந்து போய் இல்லாமல், சிறுசிறு வேலைகளை செய்வது என்று உங்களை நீங்கள் சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ளுங்கள்.

இப்படி செய்தால் உடல் எடை அதிகரிப்பு சீராக, ஆரோக்கியமானதாக இருக்கும். கர்ப்ப கால சர்க்கரை நோய்க்கான வாய்ப்பும் குறையும்.