வெஜ் பிரியாணி, காலிஃப்ளவர் கிரேவி… விருந்தில் அசத்தலாம்!

 

வெஜ் பிரியாணி, காலிஃப்ளவர் கிரேவி… விருந்தில் அசத்தலாம்!

விருந்து பற்றி கேள்விப்பட்டிருப்போம். அதுவும் உறவினர் வீட்டு விருந்து என்றால் தடபுடலாகக் கவனிப்பார்கள். அத்தை, சித்தி, பெரியம்மா மற்றும் குடும்பத்து உறவுகள் அனைவரும் ஒரே குடும்பமாக சமையல் செய்து சாப்பிடும்போது எல்லோருக்கும் குதூகலம் பொங்கும். அவரவருக்கு தெரிந்ததை சமைத்துச் சாப்பிடுவதைவிட சமையல்கலை நிபுணர் ஆதிரை வேணுகோபாலிடம் விருந்து சமையல் பற்றி கேட்டோம். ஆதிரை வேணுகோபால் சொன்ன சில விருந்து ரெசிபிகள் பற்றிப் பார்ப்போமா?

வெஜ் பிரியாணி, காலிஃப்ளவர் கிரேவி… விருந்தில் அசத்தலாம்!

ஸ்பைஸி வெஜ் பிரியாணி!
இன்றைக்கு பிரியாணி இல்லாமல் எந்தச் சாப்பாடும் மணப்பதில்லை. அசைவம் சேர்க்காமல் கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு மற்றும் சில காய்கறிகளைக் கொண்டு ஆதிரை வேணுகோபால் சமைத்து அசத்திய `ஸ்பைஸி வெஜ் பிரியாணி’ பற்றிப் பார்ப்போம்.
ஸ்பைஸி வெஜ் பிரியாணி செய்ய தேவையான பொருள்கள்: பாசுமதி அரிசி – ஒரு கப், வெங்காயம், தக்காளி – தலா இரண்டு, உருளைக்கிழங்கு, கேரட் – தலா ஒன்று, பீன்ஸ் – ஆறு எண்ணிக்கை, பச்சைப் பட்டாணி – கைப்பிடி அளவு, பச்சை மிளகாய் – நான்கு, தேங்காய்த் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன், முந்திரி – ஆறு எண்ணிக்கை, இஞ்சி – சிறு துண்டு, பூண்டு – ஆறு பல், தனியா, கசகசா – தலா ஒரு டீஸ்பூன், சீரகம் – அரை டீஸ்பூன், பட்டை, லவங்கம், கொத்தமல்லித்தழை – சிறிது, வெண்ணெய், நெய் – தலா அரை டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.
எப்படிச் செய்வது: வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி அவற்றை தனித்தனியாக மிக்ஸியில் ஒன்றிரண்டாக அரைக்க வேண்டும். கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கை பொடிப்பொடியாக நறுக்க வேண்டும். இதற்கிடையே பச்சை மிளகாய், தேங்காய்த் துருவல், முந்திரி, இஞ்சி, பூண்டு, தனியா, கசகசா, சீரகம் ஆகியவற்றை கொஞ்சம் நீர் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்து எடுக்கவேண்டும். பட்டை, லவங்கத்தை நெய்யில் வறுத்துப் பொடியாக்கி வைத்துக் கொள்ளுங்கள். குக்கரில் நெய், வெண்ணெயைச் சேர்த்து உருக்கி அதில் பட்டை, லவங்கப் பொடியைப் போட்டு நறுக்கிய காய்கறிகளையும் உப்பையும் சேர்த்து நன்றாக வதக்கவேண்டும். அதன்பிறகு அரைத்த வெங்காயம், தக்காளியைச் சேர்த்து வதக்கவேண்டும். இதைத்தொடர்ந்து அரைத்த பச்சை மிளகாய் மசாலா விழுதைச் சேர்த்து வதக்கி, ஒன்றரை கப் நீர் சேர்க்கவேண்டும். ஒரு கொதி வந்ததும் கழுவிய பாசுமதி அரிசியைப் போட்டு குக்கரை மூட வேண்டும். நன்றாக ஆவி (ஸ்டீம்) வந்ததும் குக்கர் வெயிட்டைப் போட்டு, அடுப்பை ‘சிம்’மில் வைத்து 10 நிமிடத்துக்குப் பிறகு இறக்கி, கொத்தமல்லித்தழை தூவி பரிமாறினால் பிரியாணி வாசனை ஆளைத் தூக்கும்.

வெஜ் பிரியாணி, காலிஃப்ளவர் கிரேவி… விருந்தில் அசத்தலாம்!

குஸ்கா!
பிரியாணி சிலருக்கு பிடிக்கும். இன்னும் சிலருக்கு குஸ்கா பிடிக்கும். அதுபற்றிப் பார்ப்போம்.
`குஸ்கா’ செய்யத் தேவையான பொருள்கள்: பாசுமதி அரிசி – ஒரு கப், பெரிய வெங்காயம், தக்காளி – தலா ஒன்று, கொத்தமல்லித் தழை, புதினா – தலா ஒரு கைப்பிடி அளவு, இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் – 3, பிரிஞ்சி இலை – ஒன்று, பட்டை, லவங்கம் – தலா ஒன்று, தேங்காய்ப் பால் – ஒரு கப், எண்ணெய், நெய் – தலா 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.
எப்படிச் செய்வது: வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளியுடன் கொத்தமல்லித் தழை, புதினா சேர்த்து வதக்கி சூடு ஆறியதும் மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும், குக்கரில் நெய், எண்ணெய் விட்டு… பிரிஞ்சி இலை, பட்டை, லவங்கம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் தாளித்து… இஞ்சி – பூண்டு விழுது, வெங்காயம் – தக்காளி விழுது சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் தேங்காய்ப் பால் மற்றும் ஒரு கப் நீர், உப்பு சேர்த்து, ஒரு கொதி வந்ததும் கழுவிய அரிசியை சேர்த்து, குக்கரை மூடி, நன்கு ஸ்டீம் வந்ததும் ‘வெயிட்’ போட்டு (அடுப்பை ‘சிம்’மில் வைத்து) 10 நிமிடத்துக்குப் பிறகு நிறுத்தவும். குக்கர் பிரஷர் இறங்கியதும் குக்கரைத் திறந்தால் கமகமவென குஸ்கா மணக்கும்.

வெஜ் பிரியாணி, காலிஃப்ளவர் கிரேவி… விருந்தில் அசத்தலாம்!

காலிஃப்ளவர் கிரேவி!
`காலிஃப்ளவர் கிரேவி’. வழக்கம்போன்ற உணவுகளாக இல்லாமல் இப்படி வித்தியாசமாக வீடுகளில் சமைத்துக் கொடுத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சப்புக்கொட்டி சாப்பிடுவார்கள். அதுவும் விருந்து நேரங்களில் இந்த உணவு கூடுதல் சிறப்பு சேர்க்கும்.
`காலிஃப்ளவர் கிரேவி’ செய்யத் தேவையான பொருள்கள்: காலிஃப்ளவர் – ஒன்று, வெங்காயம் – 4, பூண்டு – 8 பல், முந்திரிப்பருப்பு – 10, காய்ந்த மிளகாய் – 8, உப்பு – தேவையான அளவு, லவங்கம் – 2, பட்டை – 2 சிறு துண்டுகள், சீரகம் – ஒன்றரை டீஸ்பூன், தனியா – ஒரு டீஸ்பூன், தேங்காய்த் துருவல் – ஒரு கப், மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், கசகசா – ஒரு டேபிள்ஸ்பூன், தக்காளி – 2 (விழுதாக அரைத்துக் கொள்ளவும்), கொத்தமல்லித்தழை – சிறிதளவு, எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்.
எப்படிச் செய்வது: காலிஃப்ளவரை நன்கு சுத்தம் செய்து துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள். பூண்டு மற்றும் வெங்காயத்தை சேர்த்து ஒன்றிரண்டாக மிக்ஸியில் அரைத்து எடுங்கள். முந்திரிப்பருப்பு, காய்ந்த மிளகாய், உப்பு, லவங்கம், பட்டை, சீரகம், தனியா, தேங்காய்த் துருவல், மஞ்சள்தூள், கசகசாவை மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும். கொத்தமல்லியை பொடியாக நறுக்கவும்.
காலிஃப்ளவர் துண்டுகளுடன், வெங்காயம் – பூண்டு விழுது, அரைத்த மசாலா விழுது, தக்காளி விழுது சேர்த்து நன்கு பிசிறிக் கொள்ள வேண்டும். அடி கனமான வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பிசிறிய காலிஃப்ளவர் துண்டுகளை சேர்க்கவும் பிறகு அதில் ஒரு கப் நீர் விட்டு, சுமார் 20 நிமிடம் மூடி வைக்கவும். அடி பிடிக்காமலிருக்கிறதா என்று அவ்வப்போது திறந்து பார்த்துக்கொள்ளுங்கள்.
காலிஃப்ளவர் வெந்து கிரேவி ஆனதும் இறக்கி, கொத்தமல்லித்தழை தூவி பரிமாறுங்கள், அருமையாக இருக்கும்.