வன்னியர் 20 சதவிகித இடஒதுக்கீடு – கூட்டணிக்காக சமரசம் செய்யப்போகிறாரா ராமதாஸ்?

 

வன்னியர் 20 சதவிகித இடஒதுக்கீடு – கூட்டணிக்காக சமரசம் செய்யப்போகிறாரா ராமதாஸ்?

பாட்டாளி மக்கள் கட்சி தனது சாதனையின் முக்கிய அம்சமாகச் சொல்லிக்கொள்வது மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவுக்கான இடஒதுக்கீடு தங்களின் போராட்டத்தால் மட்டுமே நடைமுறைக்கு வந்தது என்று.

1987 ஆம் ஆண்டில் வன்னியர் சங்கம் சார்பாக, வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்ற போராட்டமும், அதனால் அப்போது ஆண்டுகொண்டிருந்த எம்.ஜி.ஆர் தலைமையிலான ஆட்சியின் காவல் துறையால் 21 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் சிறையில் அடைக்கப்பட்டனர். அடுத்து வந்த கருணாநிதி ஆட்சியில் பேச்சு வார்த்தையின் மூலம் 100 க்கும் மேற்பட்ட சாதிகளை இணைத்து மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் எனும் பிரிவை ஏற்படுத்தி இடதுக்கீடு அளிக்கப்பட்டது.

வன்னியர் 20 சதவிகித இடஒதுக்கீடு – கூட்டணிக்காக சமரசம் செய்யப்போகிறாரா ராமதாஸ்?

ஆனால், பாமக நிறுவன தலைவர் மருத்துவர் ராமதாஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருவது வன்னிய சாதிக்கு மட்டுமே தனியாக 20 சதவிகித இடஒதுக்கீடு வேண்டும் என்பதே. அதை வலியுறுத்தியே டிசம்பர் மாதத்தில் பெரும் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர் பாமகவினர்.

அந்தப் போராட்டத்திற்காக சென்னையை நோக்கி வந்த பாமகவினர் வழியேலேயே தடுத்து நிறுத்தப்பட்டதும், ரயிலில் அவர்கள் கல் விட்டெறிந்த சம்பவங்களும் நடந்தேறின. ஆயினும் வன்னியர்களுக்கு 20 % இடஒதுக்கீடு வேண்டும் என உறுதியாக இருந்தது பாமக தலைமை.

வன்னியர் 20 சதவிகித இடஒதுக்கீடு – கூட்டணிக்காக சமரசம் செய்யப்போகிறாரா ராமதாஸ்?

பாராளுமன்ற தேர்தலின்போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ‘திமுக ஆட்சியில் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு அளிக்கப்படும்’ என்று வாக்குறுதி அளித்தார். அதை பாமக தலைவர்கள் கடுமையாக எதிர்த்தனர். எந்த நிலையில் வன்னியர்களுக்கு தனியே 20 சதவிகித இடஒதுக்கீடு என்றே உறுதியாக இருந்தார் பாமக மருத்துவர் ராமதாஸ்.

ஜனவரி 7-ம் தேதி மருத்துவர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், ’வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டுச் சொத்தை மீட்பதற்காகவே அறவழி தொடர் போராட்டங்களை நடத்துகிறோம். இனியும் எங்களை யாரும் ஏமாற்ற முடியாது. 20% இட ஒதுக்கீட்டை அடையும் வரை ஓய மாட்டோம்!’ என்று உறுதியுடன் பதிவிட்டார்.

ஆனால், அதேநேரம் உள் ஒதுக்கீட்டு கொடுத்தால் ஓகே என்ற நிலைக்கு தயாராகி விட்டார் என்றே மற்ற ட்விட்டுகள் காட்டுகின்றன.
’பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு கேரளத்தில் 8 தொகுப்புகளாக, ஆந்திரத்தில் 6 தொகுப்புகளாக, கர்நாடகத்தில் 5 தொகுப்புகளாக பிரித்து வழங்கப்படுகிறது. அதனால் அங்கு அனைத்து சமூகங்களுக்கும் சமூகநீதி கிடைக்கிறது!’ என்று குறிப்பிடுகிறார் ஒரு பதிவில்.

இன்று அதிமுக சார்பாக கூட்டணி குறித்து பேச ஒரு குழு ராமதாஸைச் சந்திக்கச் சென்றுள்ளது. அதில் ஸ்டாலின் கூறியதைப் போல MBC க்குள் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு அளிக்கும் கோரிக்கையை வைத்து அதை தேர்தலுக்கு முன் நிறைவேற்ற வேண்டும் என்று கூறுவார் என்றே அரசியல் வட்டாரச் செய்திகள் கூறுகின்றன. ஏனெனில், கூட்டணியில் நீடிக்க ஒரு லாஜிக் கான காரணம் தேவை என்பதே பாமகவின் நிலைபாடு.

அப்படி அதிமுக அரசு நிறைவேற்றி விட்டால் வன்னியர் வாக்குகள் அதிமுக கூட்டணிக்கு வரும் என்றும் அதிமுக கணக்குப் போடுகிறது. ஆனால், இதில் பாஜகவின் நிலைபாடு என்பதே இது நிறைவேற சாத்தியம் இருக்கிறதா.. இல்லையா என்பதை முடிவு செய்யும்.

வன்னியர்களுக்கு 20 சதவிகித இடஒதுக்கீடு என்பதிலிருந்து கூட்டணி தொடர உள் ஒதுக்கீட்டுக்கு தயாராகி வருகிறதோ பாமக எனும் கேள்வி அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.