முதல்வர் ஸ்டாலினின் அறிவிப்புக்கு… வானதி சீனிவாசன் வரவேற்பு!

 

முதல்வர் ஸ்டாலினின் அறிவிப்புக்கு… வானதி சீனிவாசன் வரவேற்பு!

தொழிற்படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு மசோதாவுக்கு பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் வரவேற்பு அளித்துள்ளார்.

முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அரசுப் பள்ளி மற்றும் அரசு பள்ளி மாணவர்களின் தரத்தை உயர்த்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தொழிற்படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க முடிவு செய்தது. இன்று நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் முதல்வர் மு.க ஸ்டாலின் அதற்கான சட்ட முன்வடிவை தாக்கல் செய்தார்.

முதல்வர் ஸ்டாலினின் அறிவிப்புக்கு… வானதி சீனிவாசன் வரவேற்பு!

அரசு பள்ளி மாணவர்களின் நலனுக்காக இந்த முடிவை அரசு எடுத்திருப்பதாகவும் தனியார் பள்ளி மாணவர்களை அரசு பள்ளி மாணவர்கள் எதிர்கொள்ள வேண்டிய சூழல் நிலவுவதால் உள்ஒதுக்கீடு அறிவிக்கப்படுவதாகவும் முதல்வர் சட்டப்பேரவையில் தெரிவித்தார். இதற்கு எதிர்கட்சி தலைவர் பழனிசாமி வரவேற்பு அளித்தார். பிற கட்சி எம்எல்ஏக்களும் ஒருமனதாக இந்த உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு வரவேற்பு அளித்தனர். பின்னர், குரல் வாக்கெடுப்பின் மூலமாக சட்டப்பேரவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், தொழிற்படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்கிய அரசின் முடிவுக்கு வரவேற்பு தெரிவித்து பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழகத்தில் உயர்கல்வியில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது. இம்மாணவர்களுக்கான கல்விகட்டணத்தையும் அரசு ஏற்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.