எதற்கு என்ன ஹோமம் செய்ய வேண்டும் தெரியுமா?

 

எதற்கு என்ன ஹோமம் செய்ய வேண்டும் தெரியுமா?

தனி நபர் நலன், வீட்டு நலன், நாட்டு நலன்களுக்காக ஹோமங்கள், யாகங்கள் செய்வது தொன்றுதொட்டு நடந்து வருகிறது. சிக்கல்களிலிருந்து காக்க, நன்மை நடக்க யாகங்கள் நடத்தப்படுகின்றன. வாழ்வில் ஏற்படும் தடைகள் நீங்க, திருஷ்டி நீங்க, ஆரோக்கியம், செல்வம் மேம்பட என பல்வேறு காரணங்களுக்காக ஹோமங்கள் நடத்தப்படுகின்றன. என்ன என்ன ஹோமங்கள், எதற்காக நடத்தப்படுகின்றன என்பதைப் பற்றி பார்ப்போம்!

ஹோமம் என்பது அக்னி பகவான் மூலமாக, குறிப்பிட்ட தெய்வத்துக்கு அவிர்பாகம் அனுப்பி அருள் பெறுவது என்று அர்த்தம் ஆகும்.

எதற்கு என்ன ஹோமம் செய்ய வேண்டும் தெரியுமா?

கணபதி ஹோமம்: ஹோமம் என்றாலே நம் நினைவுக்கு வருவது கணபதி ஹோமம்தான். காரியத் தடைகள் நீங்க இது செய்யப்படுகிறது. மேலும் புதுமனை புகுவிழா உள்ளிட்ட மங்கள நிகழ்வுகளின் போதும் இது செய்யப்படுகிறது.

சுதர்ஸன ஹோமம்: பகைவர்களை அழிக்க, பில்லி, சூனியம், ஏவல் உள்ளிட்ட தீய சக்திகளை அழிக்க சுதர்ஸன ஹோமம் செய்யப்படுகிறது. இந்த ஹோமம் செய்வதன் மூலம் எதிரிகளை வெற்றி கொள்ளலாம்.

நவகிரஹ ஹோமம்: கிரஹ தோஷங்களில் இருந்து நீங்க, நவகிரகங்களின் ஆசியைப் பெற இது செய்யப்படுகிறது.

லட்சுமி குபேர-ஹோமம்: வறுமை நீங்கிச் செல்வச் செழிப்பு ஏற்பட, பொருளாதார முன்னேற்றம் அடைய, தன லாபத்துக்காகவும், வியாபார வளர்ச்சிக்காகவும் செய்யப்படுகிறது.

ஸ்ரீகாந்தர்வ ராஜ ஹோமம்: ஆண்களுக்கு இருக்கும் திருமணத் தடையை நீக்கி விரைவில் திருமணம் நடைபெற ஸ்ரீகாந்தர்வ ராஜ ஹோமம் செய்ய வேண்டும். பெண்களுக்கு ஏற்படும் திருமணம் தடை நீங்கச் சுயம்வர கலா பார்வதி ஹோமம்  செய்ய வேண்டும்.

சரஸ்வதி ஹோமம்: கல்வி அறிவு பெருகச் செய்யப்படுகிறது.

சண்டி ஹோமம்: பயம், தரித்திரம் நீங்கி, தைரியம் ஏற்பட, நம் வளர்ச்சிக்குக் குறுக்கே நிற்கும் தடைகளை அகற்றச் செய்யப்படுகிறது.

ஆயுஷ்ய ஹோமம்: நீண்ட ஆயுள் வேண்டிச் செய்வது.

தன்வந்திரி ஹோமம்: ஆரோக்கிய வாழ்வுக்கான ஹோமம் இது. நோயற்ற வாழ்வு வேண்டி இதைச் செய்யலாம்.

தில ஹோமம்: சனி பகவானால் ஏற்பட்ட தோஷம், இறந்தவர்களின் சாபம், எமபயம் நீங்க செய்யப்படுகிறது.

புத்திர கமோஷ்டி ஹோமம்: குழந்தைப் பேறு இல்லாதவர்கள், விரைவில் குழந்தை செல்வம் கிடைக்க வேண்டி செய்ய வேண்டிய ஹோமம். சந்தான கோபால கிருஷ்ண ஹோமம் கூட குழந்தைப் பேற்றுக்காக செய்யப்படும் ஹோமம் ஆகும்.

புருஷஸுக்த ஹோமம்: ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என வேண்டிச் செய்யப்படுவது. பெண் குழந்தை பிறக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் செய்ய வேண்டியது ஸ்ரீஸுக்த ஹோமம் ஆகும்.

மாக ம்ருத்யுஞ்ஞய ஹோமம்: ஆயுள் நீட்டிக்க செய்ய வேண்டிய ஹோமம் இது. இந்த ஹோமம் செய்வதன் மூலம், அகால மரணத்தைத் தடுத்து, நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழலாம்.

வித்யா விஜய ஹோமம்: வேலையின்றி அவதியுறுபவர்கள்,  படித்த படிப்புக்கேற்ற வேலை கிடைக்காமல் அவதியுறுபவர்கள் செய்ய வேண்டிய ஹோமம் இது.

ஶ்ரீப்ரத்யங்கிரா ஹோமம்: எதிரிகளின் தொல்லையிலிருந்து நீங்க, உடல் நலம் பெற, நோய் நீங்க செய்யப்படுகிறது.

வீட்டில் அமைதி நிலவ பகவத்கீதா ஹோமமும், குடும்பம் ஒற்றுமையாக இருக்க ஐக்கிய மத்திய ஹோமமும், கடன் பிரச்னை நீங்க ருண மோசன ஹோமம் செய்ய வேண்டும்!