இரவில் காய்கறியுடன் வந்த மினி வேன்… சோதனையில் அதிர்ந்த போலீஸ்… செக்போஸ்ட்டில் சிக்கிய 400 கிலோ கஞ்சா

 

இரவில் காய்கறியுடன் வந்த மினி வேன்… சோதனையில் அதிர்ந்த போலீஸ்… செக்போஸ்ட்டில் சிக்கிய 400 கிலோ கஞ்சா

செங்குன்றம் அருகே காவல்துறையினர் நடத்தி வாகன சோதனையில் ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்த 400 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

கொரோனா ஊரடங்கை பயன்படுத்தி கொள்ளையர்கள், கடத்தல் கும்பல் தங்களை கைவரிசையை காட்டி வருகின்றனர். இதனால் அனைத்து மாவட்டங்களிலும் காவல்துறையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். அப்படி இருந்தும் கடத்தல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் அடுத்த பாடியநல்லூரில் சோதனைச் சாவடியில் கடந்த 17ம் தேதி இரவு மாதவரம் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வேகமாக வந்த காய்கறி வேனை காவல்துறையினர் மடக்கினர். ஓட்டுநரிடமும், வண்டியில் இருந்தவரிடமும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதனால் காவல்துறையினருக்கு சந்தேகம் வலுத்தது. இதையடுத்து, வாகனத்தில் சோதனை மேற்கொண்டனர் காவல்துறையினர். உள்ளே இருந்த வெங்காய மூட்டைகளை ஒவ்வொன்றாக அகற்றி பார்த்தனர். அப்போது, அதன் கீழே வேறு மூட்டைகள் இருந்தது. இதனை பிரித்து பார்த்தபோது காவல்துறையினர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் ஒவ்வொரு மூட்டையாக பிரித்து பார்த்தபோது அனைத்திலும் கஞ்சா இருந்து கண்டுபிடிக்கப்பட்டது.

14 மூட்டைகளில் 400 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து இரண்டு பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். அவர்கள் மதுரை மேலமாசி வீதியை சேர்ந்த விக்னேஷ், அருண் பாண்டி என்று தெரிந்தது. பின்னர் அவர்களிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், வேனின் உரிமையாளரான புரசைவாக்கத்தை பாபுவை கைது செய்தனர். இவர்கள் ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து சென்னையில் ஒரு கும்பலுக்கு விற்பனை செய்ய இருந்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, 400 கிலோ கஞ்சாவைவும், மினி வேனையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறையினர் பின்னர் புழல் சிறையில் அடைத்தனர்.