ஒரே யூனிபார்ம்… ஒருவர் கொள்ளையடிப்பார்… ஒருவர் வெளியே இருப்பார்… போலீஸையே திணறடித்த மதுரை இரட்டை சகோதரர்கள்!

 

ஒரே யூனிபார்ம்… ஒருவர் கொள்ளையடிப்பார்… ஒருவர் வெளியே இருப்பார்… போலீஸையே திணறடித்த மதுரை இரட்டை சகோதரர்கள்!

ஒரே உடை அணிந்து கொள்ளையடித்து வந்த மதுரை இரட்டை சகோதரர்கள் காவல்துறையினர் சிக்கியுள்ளனர். குடும்ப வறுமையில் இந்த கொள்ளையில் அவர்கள் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மதுரை பைக்காரா தெருவில் வசித்து வருபவர் ராஜ்குமார் (35). இவர், திருநகரில் செல்வபோன் கடை வைத்துள்ளார். கடந்த 20ம் தேதி கடையை பூட்டி விட்டு சென்றுள்ளார் ராஜ்குமார். காலையில் வந்து கடையை திறந்துபோது அதிர்ச்சியடைந்தார். கடையில் இருந்த செல்போன்கள், மெமரி கார்டுகள் மற்றும் கல்லாவில் இருந்த 10 ஆயிரம் ரொக்கப் பணம் திருடு போய் இருந்தது தெரியவந்தது. இது குறித்து திருநகர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார் ராஜ்குமார். விரைந்து வந்த காவல்துறையினர் அங்கிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது, கடையை உடைத்து ஒருவர் உள்ளே சென்று திருடி சென்றது தெரியவந்தது.

இதையடுத்து, கைரேகைகளை பதிவு செய்த காவல்துறையினர் பழைய கொள்ளையர்களின் கைரேகையுடன் ஒப்பிட்டு பார்த்தனர். அப்போது, இரண்டு கொள்ளையர்களின் கைரேகை ஒத்துப்போனது தெரியவந்தது. ஆனால் சிசிடிவி கேமராவில் ஒருவர் முகம் மட்டுமே இருந்தது. இதனால் காவல்துறையினர் குழப்பம் அடைந்தனர். இதையடுத்து, காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, செல்போன் கடைகளில் திருடியது மதுரை தாசில்தார் நகர் பாரி தெருவைச் சேர்ந்த முருகன் என்பவரின் இரட்டை மகன்களான வைரவேல் (20), முத்துவேல் (20) என்பது தெரியவந்தது. அவர்களை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

குற்றவாளிகளை கண்டுபிடித்தது எப்படி என்பது குறித்து காவல்துறையினர் கூறுகையில், “செல்போன் கடையின் வெளியே இருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது ஒருவரின் முகம் மட்டுமே தெரிந்தது. ஆனால் கடைகளில் இரண்டு பேரின் கைரேகைகள் பதிவாகியிருந்தது. இதனால் குழப்பம் அடைந்தோம். இந்த நிலையில், மதுரை அண்ணாநகர் பகுதியில் உள்ள வழக்கு ஒன்றின் குற்றவாளிகளான மதுரை தாசில்தார் நகர் பாரி தெருவைச் சேர்ந்த வைரவேல், முத்துவேல் கைரேகைகளுடன் கடையில் பதிவான கைரேகைகளை வைத்து பார்த்தோம். அப்போது, இரண்டு கைரேகைகளும் ஒத்துப்போனது. இதை வைத்து இரட்டை சகோதரர்களை கைது செய்தோம். இருவரும் 8ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளனர். தந்தை முருகன் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளார். தாய் வீட்டு வேலை செய்து வருகிறார். குடும்பம் வறுமையில் வாடி வருகிறது. இருவருக்கும் செலவுக்கு பணம் இல்லாத நிலையில் கடைகளில் கொள்ளை அடித்து அதிலிருந்து கிடைக்கும் பணத்தை செலவு செய்து வந்துள்ளனர்.

இருவரும் ஒரே தோற்றத்தில் இருப்பதால் அதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வந்துள்ளனர். ஒரே நிறத்திலான ஆடையை அணிந்து இவர்கள் கொள்ளையடிக்க சென்றுள்ளனர். சில நேரங்களில் உள்ளே ஒருவரும், வெளியே மற்றொருவரும் இருந்து கொண்டு வெளியில் இருப்பதை போன்று பொது வெளியில் காட்டிக்கொண்டு வலம் வந்துள்ளனர். கடைகளுக்கு செல்லும் இவர்கள் அங்கிருப்பதை திருடி செல்வதை வழக்கமாக செய்து வந்துள்ளனர். அவர்களிடமிருந்து சங்கு, விலை உயர்ந்த செல்போன்கள், மெமரி கார்டு, பென்டிரைவ் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளோம்” என்று கூறினர்.

இதையடுத்து இரட்டை சகோதரர்கள் இரண்டு பேரை கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.