திம்பம் மலைப்பாதையில் கோழி எரு பாரம் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து!

 

திம்பம் மலைப்பாதையில் கோழி எரு பாரம் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து!

ஈரோடு ஆக 30
சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதையில் கோழி எரு பாரம் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தமிழக கர்நாடக மாநிலங்களுக்கு இடையே சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதை 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டது திண்டுக்கல் மைசூர் தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் மலைப்பாதையில் 24 மணி நேரமும் சரக்கு மற்றும் வாகன போக்குவரத்து நடைபெறுவது வழக்கம். கடந்த சில நாட்களாக இம்மலைப்பாதை வழியாக அதிக பாரம் ஏற்றி வரும் லாரிகள் அனுமதிக்கப்படுவதால் அடிக்கடி விபத்து ஏற்படுவது வாடிக்கையாகி வருகிறது. இந்நிலையில் இன்று காலை நாமக்கல்லில் இருந்து திம்பம் மலைப்பாதை வழியாக மைசூருக்கு கோழி எரு பாரம் ஏற்றிக்கொண்டு லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது ஆறாவது கொண்டை ஊசி வளைவில் லாரி திரும்ப முற்பட்டபோது பாரம் தாங்காமல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் தமிழகம் கர்நாடக மாநிலங்களில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து காவல்துறையினர் கிரேன் மூலம் லாரி அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
-ரமேஷ்கந்தசாமி