திருச்சி காந்தி மார்க்கெட் தற்காலிகமாக செயல்பட உயர்நீதிமன்றக் கிளை அனுமதி!

 

திருச்சி காந்தி மார்க்கெட் தற்காலிகமாக செயல்பட உயர்நீதிமன்றக் கிளை அனுமதி!

திருச்சி, காந்தி மார்க்கெட் தற்காலிகமாக செயல்பட அனுமதி வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் நிரந்தர கடைகள், தரைக்கடைகள், மொத்தம் மற்றும் சில்லறை விற்பனை கடைகள் என சுமார் 3000 கடைகளுக்கு மேல் செயல்பட்டு வருகின்றன. கூட்டத்தை குறைக்க கள்ளிக்குடியில் 77.6 கோடி ரூபாய் செலவில் மத்திய காய்கறி வணிக வளாகம் கட்டப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக காந்தி மார்க்கெட் மூடப்பட்டு பொன்மலை ஜி கார்னர் பகுதியில் தற்காலிக மார்க்கெட் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் காந்தி மார்க்கெட்டை நிரந்தரமாக மூடவும், கள்ளிக்குடி மார்க்கெட்டை செயல்படுத்தவும் உத்தரவிட கோரி திருச்சியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். அதில் காந்தி மார்க்கெட்டால் கொரோனா பரவ அதிக வாய்ப்புள்ளது. கள்ளிக்குடி மார்க்கெட்டில் சமூக விலகலை பின்பற்ற போதுமான இடவசதி உள்ளது. இதனால் காந்தி மார்க்கெட்டை திறக்க தடை விதிக்க வேண்டும் என கூறியிருந்தார். இந்த மனுவை ஏற்கனவே விசாரணை செய்த நீதிபதிகள் காந்தி மார்க்கெட் செயல்பட இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்து இருந்தனர்.

திருச்சி காந்தி மார்க்கெட் தற்காலிகமாக செயல்பட உயர்நீதிமன்றக் கிளை அனுமதி!

இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது, அப்போது வியாபாரிகள் சங்கம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “காந்தி மார்க்கெட்டில் 2000 கடைகள் செயல்பட்டு வருகிறது. ஆனால் திருச்சி கள்ளிக்குடி புதிதாக திறக்கப்பட்ட கடையில் 700 கடைகள் மட்டுமே உள்ளது” என தெரிவித்தார்.

அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், “கடந்த இரண்டு நாட்களாக காந்தி மார்க்கெட்டில் வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனையாக உள்ளது” என தெரிவித்தார். இதனை பதிவு செய்த நீதிபதிகள் புதிதாக கட்டப்பட்டுள்ள கள்ளிக்குடி மார்க்கெட் வியாபாரிகளிடம் கலந்து ஆலோசித்து கட்டப்பட்டதா என கேள்வி எழுப்பினர். மேலும் காந்தி மார்க்கெட்டை தற்காலிகமாக திறக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். அரசு சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள கள்ளிக்குடி மார்க்கெட்டில் என்னென்ன வசதிகள் செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து அரசு தரப்பிலும் மேலும் கள்ளிக்குடி மார்க்கெட்டில் என்னென்ன வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என்பது குறித்து வியாபாரிகள் தரப்பிலும் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை டிசம்பர் 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.