மனிதனை வாழ வைக்கும் மரங்கள்!

 

மனிதனை வாழ வைக்கும் மரங்கள்!

மரங்கள்… மனிதனுக்கு உணவளித்து வாழ்வு தரக்கூடியவை. இது இறைவனின் அற்புதப் படைப்புகளில் ஒன்று. மனிதனுக்கு உணவு தருவதோடு மட்டுமன்றி நிழல் தந்து நோய் தீர்க்கும் சக்தியாகவும் திகழ்கின்றன. எனவேதான் மரங்களை மனிதன் அழித்துவிடக்கூடாது என்பதற்காக கடவுள் பெயரைச் சூட்டி அந்தந்த ஊர்களின் பெயரில் அழைக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் ஆல மரம் திருக்குற்றாலம், புன்னை மரம் புன்னைவனம், மருதம் திருவிடைமருதூர், பனை திருப்பனந்தாள், முல்லை திருமுல்லைவாயல், வேம்பு திருவேற்காடு என மரங்களின் பெயரிலேயே ஊர்களும் அழைக்கப்பட்டன.

மனிதனை வாழ வைக்கும் மரங்கள்!காடுகள்:
மரங்கள் நிலத்தடி நீரைச் சேமித்து வைப்பதுடன் பயிர்களுக்கு வழங்கி பூமியின் ஆழத்தில் உள்ள சத்துகளை உறிஞ்சி நிலமட்டத்தில் பரப்பும் அரும்பெரும் செயலையும் செய்து வருகிறது. மரங்கள் மண் அரிப்பைத் தடுக்கக்கூடியவை. வயல்வெளியின் ஓரங்களில் வளர்க்கப்படும் மரங்கள் நிலப்பயிர்களை காற்றினால் ஏற்படக்கூடிய சேதங்களில் இருந்து பாதுகாக்கின்றன. மரங்கள் நிறைந்த அடர்த்தியான காடுகள் உயிரினங்களுக்கு உறைவிடமாகத் திகழ்கின்றன. தூசி, புகை மற்றும் காற்றில் கலந்திருக்கும் மற்ற நச்சுப்பொருள்களை மரத்தின் இலைகள் வடிகட்டி விடுகின்றன.

மரங்கள் நிறைந்த காடுகள் மழைவளத்தைப் பெருக்குவதற்கு பெரிதும் உதவிபுரிகின்றன. பனிமலைகளும் ஆறுகளும் சுனை ஊற்றுகளும் உருவாவதற்கு மரங்கள் நிறைந்த காடுகளே காரணமாக இருக்கின்றன. அடர்ந்து படர்ந்து நீண்டு நெடிது வளர்ந்த மரங்கள் பிராணவாயு உற்பத்தியைப் பெருக்கும் பணியை ஆற்றுகின்றன. இவை மட்டுமல்லாமல் நாம் சுவாசித்து வெளியிடும் கரியமில வாயுவை மரங்களின் இலைகள்தாம் தன்னுள் உள்ளிழுத்துக்கொண்டு அவற்றை பிராணவாயுவாக வெளியிடுகின்றன. இவ்வாறாக சத்தமின்றி உலகின் சூழலை சுத்தம் செய்வதோடு மனிதனுக்குத் தேவையான ஆக்சிஜனை (பிராண வாயு) உற்பத்தி செய்யக்கூடிய ஒரு பெருந்தொழிற்சாலைகளாக மரங்கள் செயல்பட்டு வருகின்றன என்றால் அது மிகையாகாது.

மனிதனை வாழ வைக்கும் மரங்கள்!

பழைமைவாய்ந்தவை:
மரம் என்பது அளவில் பெரிய ஒரு பல்லாண்டுத் தாவரமாகும். இது நிலத்தில் விதைக்கப்படும் ஒரு விதையிலிருந்து தோன்றி நிலைத்து வளரக்கூடியது. பொதுவாக முதிர்ந்த நிலையில் 15 அடி உயரம் வளரக்கூடியது. இத்துடன் தொடர்புடைய செடி கொடி போன்ற நிலத்திணை வகைகளைவிட மரங்கள் நீண்டகாலம் வாழக்கூடியவை. சிலவகை மரங்கள் 300 அடி உயரம் வரை வளரக்கூடியவை. அவற்றில் சில மரங்கள் 2000 ஆண்டுகளுக்கும் மேலாக வாழக்கூடியவை.

மரங்களில் பல வகைகள் இருந்தாலும் ஒவ்வொருவரின் விருப்பதுக்கேற்ப பல்வேறு சூழ்நிலைகளுக்கேற்ப அவரவர்க்குத் தேவையான மரங்களைத் தாங்களாகவே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். அந்தவகையில் எந்தெந்த மரங்கள் நமது சூழ்நிலைக்கேற்ப, தேவைக்கேற்ப வளர்க்கலாம்.

மனிதனை வாழ வைக்கும் மரங்கள்!

பூவரசு – யூகலிப்டஸ்:
வேம்பு, புங்கன், பூவரசு, மலைப்பூவரசு, காட்டு அத்தி, வாதநாராயணன் மற்றும் தூங்குமூஞ்சி போன்ற மரங்கள் கோடை நிழலுக்கேற்ற மரங்களாகும். பசுந்தழை உரத்துக்கு புங்கன், வாதநாராயணன், கல்யாணமுருங்கை, பூவரசு, வாகை இனங்கள் மற்றும் கிளைரிசிடியா. கால்நடைத்தீவனத்துக்கு வாகை, கருவேல், வெள்வேல், தூங்குமூஞ்சி, சூபாபுல், ஒதியன் மற்றும் ஆச்சா. சீமைக்கருவேலம், யூகலிப்டஸ், சவுக்கு, குருத்தி, நங்கு, பூவரசு, சூபாபுல் மற்றும் வேல மரம் போன்றவற்றை விறகுக்காக வளர்க்கலாம்.

மருந்துப் பொருள்களுக்காக கடுக்காய், தான்றிக்காய் மற்றும் எட்டிக்காய் போன்றவற்றை வளர்க்கலாம். எண்ணெய்க்காக வேம்பு, பின்னை, புங்கம், இலுப்பை போன்ற மரங்களையும் காகிதம் தயாரிக்க மூங்கில், யூகலிப்டஸ், சூபாபுல், ஆனைப்புளி ஆகிய மரங்களையும் வளர்க்கலாம். பூச்சி மருந்துகளாகப் பயன்படுத்த வேம்பு, புங்கன், ராம்சீதா, தங்க அரளி போன்ற மரங்களை வளர்க்கலாம். கோயில்களில் வேம்பு, வில்வம், நாகலிங்கம், தங்க அரளி, மஞ்சள் அரளி, நொச்சி மற்றும் அரசு போன்றவற்றை நட்டு வளர்க்கலாம்.

நாவல் – புளி:
குளக்கரைகளில் மருது, புளி, ஆல், அரசு, நாவல், ஆத்தி, ஆவி, இலுப்பை போன்ற மரங்களையும் பள்ளிகளில் நெல்லி, அருநெல்லி, களா, விருசம், விளா, வாதம், கொடுக்காப்புளி, நாவல் போன்ற மரங்களையும் வளர்க்கலாம். சாலையோரங்களில் புளி, வாகை, ஆல், அத்தி, அரசு, செம்மரம் மற்றும் மாவிலங்கு போன்ற மரங்களையும் மேய்ச்சல் நிலங்களில் கருவேல், வெள்வேல், ஓடைவேல், சீமைக்கருவேல் மற்றும் தூங்குமூஞ்சி மரங்களை வளர்க்கலாம். கண்மாய் பகுதியில் கருவேல், நீர்மருது, நீர்க்கடம்பு, மூங்கில், வேலிக்கருவேல், நாவல், புங்கன், இலுப்பை, இலவமரம், ராஜஸ்தான் தேக்கு போன்ற மரங்களை நட்டு வளர்க்கலாம்.