ஒரு பக்கம் பயிற்சி… மறுபக்கம் மாணவிகளுக்கு பாலியல் டார்ச்சர்… போக்ஸோவில் கைதான ஹாக்கி பயிற்சியாளர்

 

ஒரு பக்கம் பயிற்சி… மறுபக்கம் மாணவிகளுக்கு பாலியல் டார்ச்சர்… போக்ஸோவில் கைதான ஹாக்கி பயிற்சியாளர்

ஹாக்கி பயிற்சி பெற வந்த மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பயிற்சியாளர், அவரது உதவியாளர் ஆகியோர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். பயிற்சியாளர் சங்கர், ஒன்றிய தி.மு.க மாணவரணி அமைப்பாளராக இருந்து வருகிறார்.

தமிழகத்தில் சிறுமிகளுக்கு பாலியல் டார்ச்சர் அதிகரித்து வருகிறது. சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்து அவர்களை கொலை செய்யும் அளவுக்கு காமுகன்கள் நடந்து கொள்கிறார்கள். பெற்றோர்களுக்கும் தங்கள் பிள்ளையை வெளியில் அனுப்ப அச்சப்படுகின்றனர். இந்த சூழ்நிலையில், பயிற்சிக்கு சென்ற மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார் பயிற்சியாளர் ஒருவர். இந்த வேதனையான சம்பவம் சிவகங்கை மாவட்டத்தில் நடந்துள்ளது.

காரைக்குடியில் செயல்பட்டு வரும் செட்டிநாடு பெண்கள் ஹாக்கி கிளப்பில் மாணவிகளுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மாணவிகளுக்கு சங்கர் என்பவர் பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார். பள்ளத்தூரை சேர்ந்த சங்கர், சாக்கோட்டை மேற்கு ஒன்றிய தி.மு.க மாணவரணி அமைப்பாளராக இருக்கிறார். இவரிடம் மதுரை அருகே வாடிப்பட்டி பகுதியை சேர்ந்த வாணி, ஹரிணி (பெயர்கள் மாற்றம்) என்ற சகோதரிகள் ஹாக்கி பயிற்சி பெற்று வந்தனர். இந்த நிலையில், சிறுமிகளை தனது அறையில் வைத்து சங்கர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனை வெளியில் சொன்னால் உங்களை கொன்றுவிடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதனால் பயந்துபோன சிறுமிகள் இதனை யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளனர்.

இதனை பயன்படுத்திக் கொண்ட சங்கர், சிறுமிகளுக்கு அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் தான் சாப்பிட்ட சாப்பாட்டை அந்த சிறுமிகளை சாப்பிடும்படி கட்டாயப்படுத்தி வந்துள்ளார். இவரது கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்து வந்துள்ளதால் பொங்கி எழுந்த சிறுமிகள், ஹாக்கி பயிற்சியாளரால் தங்களுக்கு நடந்த பாலியல் கொடுமைகளை பள்ளி முதல்வரிடம் கூறியுள்ளார். அவர் பெற்றோருக்கு கொடுத்த தகவலின் படி அவர்கள் காரைக்குடி அனைத்து மகளிர் காவல்துறையில் புகார் அளித்தனர். இதையடுத்து, வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், பயிற்சியாளர் சங்கரையும், அவரது உதவியாளர் கண்ணனையும் போக்ஸோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதனிடையே, காழ்புணர்ச்சி காரணமாக பயிற்சியாளர் சங்கர் மீது மாணவிகள் மூலம் பாலியல் புகார் கொடுக்கப்பட்டுள்ளதாக அவரிடம் பயிற்சி பெற்று வரும் மாணவிகள் சிலர் மாவட்ட துணைக் கண்காணிப்பாளர் அருணிடம் புகார் மனு கொடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலியே பயிரை மேய்ந்த கதையாக இது நடந்துள்ளது.