சென்னை புறநகர் சிறப்பு ரயில்கள் சேவை 244ல் இருந்து 320ஆக அதிகரிப்பு!

 

சென்னை புறநகர் சிறப்பு ரயில்கள் சேவை 244ல் இருந்து 320ஆக அதிகரிப்பு!

புறநகர் சிறப்பு ரயில்கள் சேவையை 244 -லிருந்து 320 ஆக அதிகரித்துள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தெற்கு ரயில்வே சென்னை புறநகர் சிறப்பு ரயில்களின் கூட்ட நெரிசல் மிகுந்த நேரம் (peak hours), கூட்ட நெரிசல் இல்லாத நேரம் (non-peak hours) ஆகிய காலவரைவில் மாற்றம் செய்துள்ளது. அதன்படி வரும் 2020 டிசம்பர் 7 (திங்கட்கிழமை) முதல், கூட்ட நெரிசல் மிகுந்த நேரமாக (Peak hours) காலை 7:00 மணி முதல் 09:30 மணி வரை (முன்பு 10:00 மணி வரை என இருந்தது) எனவும், மாலை 04:30 மணி முதல் இரவு 07:00 மணி வரை (முன்பு இரவு 07:30 மணி வரை என இருந்தது) எனவும் கால வரைவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அத்தியாவசிய பணியாளர் பட்டியலின் கீழ் வராத பெண் பயணிகள் சென்னை புறநகர் ரயில்களில் இந்த கூட்டம் நெரிசல் இல்லா நேரங்கள் என புதிதாக வரையறுக்கப்பட்டுள்ள நேரங்களில் திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை பயணிக்கலாம். ஞாயிற்றுக்கிழமைகளில் எல்லா நேரங்களிலும் பயணிக்க பெண் பயணிகள் அனுமதிக்கப்படுகிறார்கள். இதனால் புதிய காலவரைவு மாற்றத்தின் காரணமாக அத்தியாவசிய பணியாளர் பட்டியலில் வராத பெண் பயணிகள் கூடுதல் நேரங்களில் புறநகர் சிறப்பு ரயில்களில் பயணிக்க முடியும். எனினும் அத்தியாவசிய பணியாளர் பட்டியலில் வரும் பெண் பயணிகள் எல்லா நேரங்களிலும் சென்னை புறநகர் ரயில்களில் பயணிக்க எந்த கட்டுப்பாடும் கிடையாது.

சென்னை புறநகர் சிறப்பு ரயில்கள் சேவை 244ல் இருந்து 320ஆக அதிகரிப்பு!

முன்பு அறிவித்தது போலவே அத்தியாவசிய பணியாளர் பட்டியலின் கீழ் வராத பெண் பயணிகள் மாதாந்திர பயணச்சீட்டோ அல்லது அல்லது சாதாரண பயணச்சீட்டைக் கொண்டோ சிறப்பு புறநகர் ரயில்களில் பயணிக்கலாம். இவர்கள் கூட்ட நெரிசல் இல்லாத நேரங்களில் (non-peak hours) ரயில்களில் பயணிக்க சாதாரண பயணச்சீட்டை அந்தந்த ரயில் நிலையங்களிலேயே மேற்குறிப்பிடப்பட்டுள்ள கூட்ட நெரிசலில்லா நேரம் துவங்கும் முன்பு ரயில் பயணச்சீட்டைக் பெற்றுக்கொண்டு பயணிக்கலாம். 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளை இந்த கூட்ட நெரிசல் இல்லாத நேரங்களில் தங்களுடன் பயணிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். திங்கள் முதல் சனிக்கிழமை வரை அத்தியாவசிய பணியாளர் பட்டியலில் வராத பெண் பயணிகள் காலை 07:00 – 09:00 மற்றும் மாலை 04:30 – இரவு 07:00 மணிவரை ஆகிய நேரங்களில் (peak hours) புறநகர் ரயில்களில் பயணிக்க அனுமதி கிடையாது.

மத்திய, மாநில அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் அத்தியாவசிய பணியாளர்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் விதமாகவும், ரயில்களில் கூட்ட நெரிசலை குறைக்கும் வண்ணமாக, தெற்கு ரயில்வே, புறநகர் சிறப்பு ரயில்கள் சேவையை 244 -லிருந்து 320 ஆக அதிகரித்துள்ளது. (கொரோனா காலத்திற்கு முன் இயக்கப்பட்ட புறநகர் ரயில்களில் எண்ணிக்கையில் ஏறக்குறைய 50% இயக்கப்படுகிறது). ” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.