குழந்தைகளின் நினைவுத் திறனை மழுங்கடிக்கும் சர்க்கரை!

 

குழந்தைகளின் நினைவுத் திறனை மழுங்கடிக்கும் சர்க்கரை!

கூட்டுக் குடும்பம் மறைந்து, தனிக் குடித்தன கலாச்சாரத்துக்கு வந்துவிட்ட சூழலில் குழந்தை வளர்ப்பு என்பது ஒவ்வொரு பெற்றோருக்குமே மிகப்பெரிய சவாலாகவே உள்ளது. கூட்டுக் குடும்பமாக இருக்கும்போது வீட்டில் உள்ள பெரியவர்கள், சிறியவர்கள் என அனைவரும் குழந்தையை பார்த்துக்கொள்வார்கள். அனைவரையும் பார்த்து வளரும் குழந்தை மிக எளிதாக அனைத்தையும் கற்றுக்கொள்ள ஆரம்பிக்கிறது. தனிக் குடும்பத்தில் அம்மா, அப்பா முகத்தை மட்டுமே பார்த்து வளரும் சூழல் உள்ளது. அதை விட்டால் டி.வி-யில் ஒடும் கார்ட்டூன், ரைம்ஸ் பார்த்துத்தான் குழந்தைகள் வளருகின்றனர்.

குழந்தைகளின் நினைவுத் திறனை மழுங்கடிக்கும் சர்க்கரை!

குழந்தை மீது அதீத அன்பு வைத்திருக்கிறோம் என்பதைக் காட்ட குழந்தைக்கு சாக்லெட், கேக் என்று அதிக அளவில் இனிப்புகள் வாங்கிக் கொடுக்கிறோம். அதிகப்படியான சர்க்கரை நிறைந்த உணவு குழந்தைகளின் நினைவாற்றல் செயல்திறனை மந்தமாக்குகிறது என்கிறது ஆய்வுகள். இதனால் குழந்தைகளின் கற்றல் திறன் பாதிக்கப்படுகிறது என்று எச்சரிக்கின்றனர்.

அதிகப்படியான இனிப்பு நிறைந்த குளிர்பானங்கள், உணவுகள் குழந்தைகளின் நினைவு திறனை பாதிப்பதாக Translational Psychiatry என்ற மருத்துவ இதழில் வெளியான கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு ஒன்றும் ஆகாது என்ற நினைப்பில் அதிகப்படியான இனிப்புகள் வழங்கப்படுகின்றன. இதன் காரணமாகக் குழந்தைகளுக்கு உடல் பருமன், இதய நோய்கள், நினைவு திறன் குறைவு போன்றவை ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜார்ஜியா பல்கலைக் கழகம் மற்றும் தெற்கு கலிஃபோர்னியா பல்கலைக் கழகங்கள் நடத்திய ஆய்வில் அதிக இனிப்பு எடுத்துக்கொண்ட குழந்தைகள், வளர் இளம் பருவத்தினருக்கு கற்றல், நினைவாற்றல் பாதிக்கப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. இப்படி இனிப்புகள் எடுத்துக்கொள்வது சிறுகுடலில் வாழும் பாக்டீரியா காலணியைப் பாதிக்கிறது. இது ஊட்டச்சத்து கிரகிப்பது உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது, ஊட்டச்சத்துக் குறைபாட்டால் நினைவாற்றல் பாதிப்பு உள்ளிட்டவை ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கு சர்க்கரை உணவு வழங்குவது அவர்கள் ரத்தத்தில் திடீரென்று சர்க்கரை அளவு அதிகரிக்கச் செய்கிறது. இதன் காரணமாக இன்சுலின் ரெசிஸ்டென்ஸ் ஏற்பட்டு, டைப் 2 சர்க்கரை வருவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது. மேலும் இது அவர்களின் மனநிலையில் மாற்றங்களை ஏற்படுத்துகிறது. அவர்கள் ஹைப்பர் ஆக்டிவ் ஆக செயல்படச் செய்கிறது.

சர்க்கரை உணவுக்குப் பதில் குழந்தைகளுக்கு காய்கறிகள், பழங்களை சாப்பிடுவதை பழக்கப்படுத்த வேண்டும். இது அவர்களின் வளர்ச்சியை மேம்படுத்தும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.