டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு – ஈரோட்டில் கொரோனா விதிகளை பின்பற்றி பங்கேற்ற தேர்வர்கள்

 

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு – ஈரோட்டில் கொரோனா விதிகளை பின்பற்றி பங்கேற்ற தேர்வர்கள்

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் இன்று 28 மையங்களில் நடந்த குரூப் 1 முதல்நிலை தேர்வில், தேர்வர்கள் கொரோனா பாதுகாப்பு வழிமுறையை பின்பற்றி தேர்வினை எழுதினர்.

கொரோனா ஊரடஙகு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு, தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்றது. இந்த தேர்விற்கு ஈரோடு மாவட்டத்தில் இருந்து சுமார் 7 ஆயிரத்து 993 பேர் விண்ணப்பித்திருந்தனர். சரியாக காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கிய நிலையில், 9 மணிக்கே தேர்வு மையங்களுக்கு முக கவசம் அணிந்து வந்திருந்த தேர்வர்களுக்கு, கிருமிநாசினி வழங்கப்பட்டு, தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதித்து தேர்வு அறைகளுக்குள் அனுமதிக்கப் பட்டனர். மேலும், தேர்வு மையங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டு இருந்தன.

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு – ஈரோட்டில் கொரோனா விதிகளை பின்பற்றி பங்கேற்ற தேர்வர்கள்

குரூப் 1 தேர்வில் முறைகேடுகள் நடைபெறுவதை தடுக்கும் விதமாக புதிய விதிமுறைகள் அமலுக்கு வந்தன. அதன்படி தேர்வர்கள், தங்களது வினாக்களை கருப்பு பால் பாயிண்ட் பேனா மூலம் மட்டுமே நிரப்பவும், விடை தெரியாத கேள்விகளுக்கு இ என்ற கட்டத்தை குறிக்கவும் அறிவுறுத்தப்பட்டனர். அத்துடன் தேர்வர்கள் தேர்வு அறைக்குள் நுழைந்ததும், தங்களது கைரேகையை பதிவு செய்தனர்.

தேர்வர்கள் முறைகேடுகளில் ஈடுபடுவதை தவிர்க்கும் வகையில், மாவட்டம் முழுவதும் 3 பறக்கும் படை அலுவலர்கள், 5 நடமாடும் குழுக்கள், 25 ஒளிப்பதிவாளர்கள் கண்காணப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். முன்னதாக, ஈரோடு மாவட்ட கருவூலத்தில் வைக்கப்பட்டிருந்த வினாத்தாள்கள் மற்றும் விடைத்தாள்கள் ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் தேர்வு மையங்களுக்கு கொண்டுவரப்பட்டது.