டிஎன்பிஎல்: திண்டுக்கல்லை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ்

 

டிஎன்பிஎல்: திண்டுக்கல்லை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ்

இந்த ஆண்டிற்கான டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடரின் 2வது தகுதிச்சுற்று ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் ஆகிய அணிகள் மோதின.

Image

டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. திண்டுக்கல் அணியின் ஹரி நிஷாந்த் ஒருபுறம் நிலைத்து நின்று ஆட மறுமுனையில் வரும் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.தனி ஒருவராக போராடிய ஹரி நிஷாந்த் 56 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
சாய் கிஷோர்,சித்தார்த் மணிமாறன், அலெக்சாண்டர்,அருண் ஆகியோரின் சுழலில் சிக்கிய திண்டுக்கல் அணி இறுதிவரை மீள முடியவில்லை.20 ஓவர் முடிவில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 103 ரன்களை மட்டுமே எடுத்தது.அற்புதமாக பந்துவீசிய சாய் கிஷோர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

Image

104 என்ற எளிய இலக்குடன் ஆடிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெகதீசன் மற்றும் கௌசிக் காந்தி ஆகியோர் களமிறங்கினர். சிலம்பரசனின் ஒரே ஓவரில் 4 பவுண்டரி மற்றும் 1 சிக்சர்கள் உட்பட 22 ரன்களை அடித்துப்பறக்க விட்டார் கௌசிக் காந்தி. நிதானமாக ஆடி வந்த ஜெகதீசன் 21 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். நிதானமாக ஆடிய கௌசிக் காந்தி 36 பந்துகளில் அரைசதம் கடந்து 53 ரன்களில் ஆட்டமிழந்தார்.16 ஓவர் முடிவில் சூப்பர் கிங்ஸ் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 104 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதி போட்டியில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியை சந்திக்கிறது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்.தோல்வியடைந்த திண்டுக்கல் டிராகன்ஸ் அணி நடப்பு டி.என்.பி.எல் தொடரில் இருந்து வெளியேறியது